வட மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட நான்கு பிரேரணைகளுக்கு அங்கீகாரம்

வட மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட நான்கு பிரேரணைகளுக்கு அங்கீகாரம்

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2016 | 9:43 pm

வட மாகாண சபையின் 44 ஆவது அமர்வு இன்று நடைபெற்றது. இன்றைய அமர்வில் நான்கு பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான அங்கீகாரம் பெறப்பட்டது.

வட மாகாண சபை அமர்வு அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, மாகாண சபையால் வழங்கப்பட்டுள்ள வருமானப் பரிசோதகர் நியமனங்கள் உரிய முறையில் வழங்கப்படவில்லை என ஆளுங்கட்சி உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் குற்றஞ்சாட்டினார்.

இதற்குப் பதிலளித்த வட மாகாண முதல்வர், சி.வி.விக்னேஸ்வரன், பரீட்சை அடிப்படையிலேயே நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும் தகைமை பெற்ற சிலர் பதவியை ஏற்காதமையினால், அடுத்த மட்டத்திலுள்ளவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டதாகவும் தெளிவுபடுத்தினார்.

இதனைத் தொடர்ந்து வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் அரசியலமைப்புக்குழு உருவாக்கம் தொடர்பான பிரேரணை முன்மொழியப்பட்டது.

இந்தக் குழுவின் தலைவராக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைவராகவும், இணைத் தலைவராக அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானமும் செயற்படவுள்ளனர்.

ஏனைய உறுப்பினர்களாக த.குருகுலராசா, பா.டெனிஸ்வரன், ப.சத்தியலிங்கம், பொ.ஐங்கரநேசன், கே.சயந்தன், பி.ஷிராய்வா, ம.அன்ரன் ஜெகநாதன், ஜி.ரி.லிங்கநாதன், எம்.கே.சிவாஜிலிங்கம், ப.அரியரட்ணம், எம்.தியாகராசா, அ. பரஞ்சோதி, அயுப் அஸ்மின், வை.தவநாதன், அனந்தி சசிதரன், ஜி.அர்னோல்ட் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அரசியலமைப்புக்குழுவில் 19ஆவது உறுப்பினராக க.சர்வேஸ்வரன் நியமிக்கப்பட்டார்.

அரசியலமைப்புக்குழு உருவாக்கம் தொடர்பான பிரேரணைக்கு இன்றைய சபை அமர்வில் அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், இது தொடர்பான விவாதம் அடுத்த அமர்வில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, வட மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் க.வ.கமலேஸ்வரன் மூன்று பிரேரணைகளை முன்வைத்தார்.

முல்லைத்தீவு துணுக்காய் பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தை மீள செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தல், மாங்குளத்தை வட மாகாண விவசாயிகளின் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் மையமாக மாற்றுதல், கைத்தொழில் பூங்கா மற்றும் பொருளாதார மையத்தை மாங்குளத்தில் நிறுவுதல் ஆகிய பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்