சர்வதேசத்திற்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக ஜனாதிபதியின் கூற்று அமைந்திருக்கிறது – சுமந்திரன்

சர்வதேசத்திற்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக ஜனாதிபதியின் கூற்று அமைந்திருக்கிறது – சுமந்திரன்

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2016 | 9:35 pm

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்த கருத்து தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு சுமந்திரன் பின்வருமாறு பதிலளித்தார்,

[quote]அதுபற்றி எங்களுடைய கருத்தை நாங்கள் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறோம். இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாகத்தான் ஜனாதிபதியின் கூற்று அமைந்திருக்கிறது. ஆகையினாலே, அப்படியாக செயற்பட முடியாது என்று சொல்லியிருக்கிறோம்.[/quote]

சிங்கள மக்கள் சமஷ்டியை எதிர்க்கின்றார்கள் என்ற வாதத்திற்கு இடமில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

[quote]ஒற்றையாட்சி என்ற சொற்பதத்தை உபயோகிப்பதற்கு விருப்பமாக இருப்பதற்கான காரணம், நாடு பிளவுபடாமல் இருக்க வேண்டுமானால் ஒற்றையாட்சி இருக்க வேண்டும் என்று சிலர் நினைப்பது தான். ஆட்சி அதிகாரங்கள் ஒரு சமஷ்டி முறையில் பகிரப்பட்டால், நாடு பிளவுபடாது என்று நாங்கள் சொல்லுகிறோம். ஒற்றையாட்சி இருந்தால்தான் நாடு பிளவுபடுவதற்கு அபாயமுண்டு. மாறாக இந்த நாட்டில் வாழும் எல்லா மக்கள் கையிலும் ஆட்சி அதிகாரம் உபயோகிக்கக்கூடிய வண்ணமாக சமஷ்டி முறையிலான ஆட்சியொன்று வருமாக இருந்தால் அதற்கு பிறகு நாடு பிளவுபடுவதற்கான தேவை இருக்காது.[/quote]

சர்வதேச அழுத்தம் அரசியலமைப்பில் இருக்கக்கூடாது என்ற கருத்து அரசாங்கத்திடம் உள்ள நிலையில், சமஷ்டி முறை தொடர்பில் ஆராய்வதற்கு சுமந்திரன் வெளிநாடு செல்வதன் நோக்கம் என்னவென அவரிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளிக்கையில்,

[quote]சென்ற செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி வெளியுறவுத்துறை அமைச்சர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றும்போது, இந்த நாட்டில் நடந்த பல விடயங்கள் மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதமாக புதிய அரசியலமைப்பு சட்டமொன்றை உருவாக்குவதை உறுதிப்படுத்தலாம் என்று சொல்லியிருந்தார். இது அரசாங்கம் தானாக முன்வைத்த ஒரு பொருத்தனை. இன்றைக்கு இருக்கும் புதிய முறைகள் என்ன, வெவ்வேறு நாடுகளில் இது எவ்வாறு செயற்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பற்றி ஆராய்வதற்காகத்தான் செல்கிறோம்,[/quote]

என்றார்.

அரசியலமைப்பு சட்டத்திற்கான யோசனை தொடர்பிலும் இதன்போது அவரிடம் வினவப்பட்டது.

[quote]தமிழ் மக்கள் பேரவை மட்டுமில்ல. யார், யார் எங்களுக்கு யோசனைகளை முன்வைத்தாலும், எல்லாவற்றையும் நாங்கள் கருத்தில் எடுத்து பரிசீலிப்போம். எங்களுடைய மக்கள் பலர் தங்களுடைய கருத்துக்களை எங்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மக்களிடம் கருத்துக்களைக் கேட்டறிவதற்காக அரசாங்கம் ஒரு குழுவை நியமித்திருக்கிறது. அந்தக் குழுவும் எல்லா மாவட்டங்களுக்கும் செல்லவிருக்கிறது. அதன் முன்பாகவும் மக்கள் கருத்துக்களை முன்வைக்கலாம். மக்கள் எங்களுக்குக் கொடுத்திருக்கும் ஆணை என்ன என்பது எங்களுக்குத் தெரியும். அந்த ஆணைக்கு மாறான கருத்துக்கள் ஓரிருவரிடத்திலிருந்து வந்தால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழ் மக்கள் தொடர்ச்சியாக நிராகரித்த தீர்வுத்திட்டங்கள் உள்ளன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி, மக்கள் முன்பாக வைத்த தீர்வுத்திட்டங்கள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுள்ளன. அப்படி நிராகரிக்கப்பட்ட தீர்வுத்திட்டங்களை வேறொரு அமைப்பு மூலமாக யாராவது முன்வைத்தால் நாங்கள் அதனை பரீசீலனைக்கு எடுக்க மாட்டோம்.[/quote]

கூட்டமைப்பு இதுவரை கட்சியாக பதிவு செய்யப்படாமை தொடர்பில் சுமந்திரனிடம் வினவியபோது, அவர் தெரிவித்ததாவது,

[quote]பதிவில் எந்தவிதமான முக்கியத்துவமும் கிடையாது. நாங்கள் 16 உறுப்பினர்கள் ஒரு கட்சியாக பாராளுமன்றத்தில் செயற்படுகின்றோம். 225 இல் 16 தான் என்ற எண்ணம் கூட இருக்க முடியாது. ஏன் என்றால் நாட்டில் தேசிய பிரச்சினை தீர்வதாக இருந்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்கு இணங்கி செயற்பட்டால்தான் அந்த தேசிய பிரச்சினை தீரும். 16 பேரை விட்டுவிட்டு அரசாங்கம் ஏதாவது நிறைவேற்றினாலும் நிறைவேற்றலாம். ஆனால், அது தேசிய பிரச்சினைக்கு தீர்வாக அமையாது.[/quote]

அரசியல் கைதிகளில் விவகாரம் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.

[quote]இதனைத் தீர்ப்பதற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை நாங்கள் கொடுத்துக்கொண்டே இருக்கின்றோம். ஜனாதிபதியை சந்திக்கும் போதெல்லாம் இது தொடர்பில் பேசியிருக்கிறோம். சந்திப்புக்களை ஏற்படுத்தியும் பேசியிருக்கிறோம். அரசாங்கத்தோடு குறித்த அமைச்சர்களோடு நாங்கள் தொடர்ச்சியாக பேசியிருக்கின்றோம். சற்று அவகாசம் தருமாறு கேட்டிருந்தார்கள். புதிய சட்டமா அதிபர் நியமிக்கப்படும் வரைக்கும், புதிய நியமனத்தோடு நாங்கள் எங்களுடைய அழுத்தத்தை செய்து முடிக்குமாறு கேட்போம்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்