கேள்விக்குறியாகியுள்ள முன்னாள் போராளிகளின் வாழ்க்கை

கேள்விக்குறியாகியுள்ள முன்னாள் போராளிகளின் வாழ்க்கை

எழுத்தாளர் Staff Writer

25 Jan, 2016 | 9:03 pm

மூன்று தசாப்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பல வருடங்கள் கடந்தாலும் அதன் வடுக்களை உடலிலும் மனதிலும் சுமந்து வாழும் அநேகமான முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை பல்வேறு கேள்விகளுக்கு வித்திடுகின்றது.

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு மாதாந்தம் 3000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இத்தகைய கொடுப்பனவு தமக்கு கிடைக்கவில்லை என அநேகமான முன்னாள் போராளிகள் கூறுகின்றனர்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் மன்னார் மாவட்டத்தில் தமது குடும்பத்தாருடன் இணைந்து தற்போது வாழ்ந்து வருகின்றனர்.

மடு பிரதேச செயலகப் பிரிவின் பெரிய பன்டிவிரிச்சான் கிழக்கைச் சேர்ந்த பிலிப்பு அன்டன் றொபின்சனும் இவர்களுள் ஒருவராவார்.

யுதத்தத்தில் ஒரு காலை பறிகொடுத்த 43 வயதான இந்த முன்னாள் போராளியின் மற்றைய காலும் வலுவான நிலையில் இல்லை.

இவரது உடல் முழுவதும் யுத்த வடுக்களுக்கோ பஞ்சமில்லை.

பாடசாலை செல்லும் தனது 14 வயது மகன் மற்றும் நோய்களால் பீடிக்கப்பட்டுள்ள மனைவிக்காக நாளாந்தம் வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபடுகின்றார் றொபின்சன்.

எழுந்து நிற்பதற்கு வலுவற்ற நிலையில் வீட்டிலேயே துவிச்சக்கரவண்டி திருத்தும் நிலையமொன்றை நடத்தி குடும்பத்தை வாழவைக்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டுள்ளார்.

மாதாந்த சிசிக்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியுற்றமை றொபின்சனை மேலும் பொருளாதார சிக்கலுக்குள் தள்ளியுள்ளது.

புனர்வாழ்வுபெற்று வீடு திரும்பியதன் பின்னர் பல்வேறு அதிகாரிகள் வீடுதேடி வந்து தகவல்களை திரட்டிச் சென்றாலும் உதவிகள் அனைத்தும் வார்த்தைக்கு மாத்திரமே மட்டுப்பட்டுள்ளதாக றொபின்சனின் மனைவி மேர்ஸி ரெஜினா கூறினார்.

விவசாயத்தில் ஈடுபடுவதற்கு உடல் நிலை ஒத்துழைக்காத நிலையும் தன்னம்பிக்கையுடன் குடும்பத்திற்காக வாழ்க்கை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் றொபின்சன்.

அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் தொடர்ந்தும் சிரமத்தை எதிர்நோக்கிவரும் முன்னாள் போராளிகளுக்கு மாதாந்தக் கொடுப்பனவு மற்றும் வாழ்வாதார கடன் உதவிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் தார்மீகக் கடமையாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்