இலங்கையுடன் தொழில்நுட்ப உடன்படிக்கைக்கு Microsoft சர்வதேச நிறுவனம் திட்டம் 

இலங்கையுடன் தொழில்நுட்ப உடன்படிக்கைக்கு Microsoft சர்வதேச நிறுவனம் திட்டம் 

எழுத்தாளர் Bella Dalima

22 Jan, 2016 | 9:20 pm

இலங்கையுடன் தொழில்நுட்ப உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக்கொள்ள எண்ணியுள்ளதாக Microsoft சர்வதேச நிறுவனத்தின் தலைவர் ஜோன் – பிலிபே கோடோய்ஸ் தெரிவித்துள்ளார்.

சுவிட்ஸர்லாந்தின் டாவோஸ் நகரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தகவல் தொழில்நுட்பம், கல்வி மற்றும் சமூக பாதுகாப்புத் துறைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக பூரண ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் இந்தக் கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டதாக பிரதமர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Microsoft சர்வதேச நிறுவனத்தின் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களை இலங்கைக்கு இலவசமாக வழங்குவதிலுள்ள இயலுமை தொடர்பிலும் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலை அடுத்து ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஆந்திர மாநிலத்துடன் ஆன்மீக, கலாசார, சுற்றுலா தொடர்புகளை ஏற்படுத்துவதிலுள்ள சந்தர்ப்பங்கள் குறித்து ஆராயும் வகையில் இரு தரப்பினரையும் உள்ளடக்கிய விசேட குழுவொன்றை நியமிக்கவும் இந்த பேச்சுவார்த்தையின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்ற சந்தர்ப்பத்தில் பிரதமர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தக்கேஹிகோ நகஓவை (Takehiko Nakao) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும், அது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடுவதற்கும் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்