யாழ். வலி வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள காணிகளை மக்களிடம் கையளிக்க துரித நடவடிக்கை

யாழ். வலி வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள காணிகளை மக்களிடம் கையளிக்க துரித நடவடிக்கை

யாழ். வலி வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள காணிகளை மக்களிடம் கையளிக்க துரித நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

21 Jan, 2016 | 7:00 am

அரசாங்கத்தின் துரித மீள்குடியேற்ற வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். வலி வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள காணிகளை உத்தியோகபூர்வமாக மீளக் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மக்களின் காணிகள் நாளை (21) மீளக் கையளிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு,புனர்வாழ்வளிப்பு,மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வேலாயுதம் சிவஞானசோதி குறிப்பிட்டுள்ளார்.

வலிகாமம் வடக்கு-தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட காங்கேசன்துறை தெற்கு ,வீமன்காமம் வடக்கு, தையிட்டி தெற்கு ,பலாலி தெற்கு ,பலாலி கிழக்கு, பலாலி வடக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள காணிகள் நாளை மீள கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வளலாய் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட காணிகளும் மீளக் கையளிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் அறிக்கை ஒன்றினூடாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பணிப்புரைக்கமைய சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்களின் வழிக்காட்டலின் கீழ் வலி வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள காணிகள் நாளை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்