நூற்றாண்டு கடந்து இந்தியாவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட மரத்தவளை

நூற்றாண்டு கடந்து இந்தியாவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட மரத்தவளை

நூற்றாண்டு கடந்து இந்தியாவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட மரத்தவளை

எழுத்தாளர் Bella Dalima

21 Jan, 2016 | 5:49 pm

ஒரு நூற்றாண்டிற்கு முன்பே அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட மரத்தவளை ஒன்று இந்தியாவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தவளையை வட கிழக்கு இந்தியக் காடுகளில் இந்திய உயிரியல் விஞ்ஞானியான சத்தியபாமா தாஸ் பிஜுவும் அவரது குழுவினரும் கண்டுபிடித்துள்ளனர்.

1870 இல் பிரிட்டிஷ் விலங்கியலாளரான தாமஸ் ஜெர்தோன் இந்த வகைத் தவளை ஒன்றைக் கண்டறிந்தார். இதனால், இந்தத் தவளைக்கு பாலிபிடேட்ஸ் ஜெர்தோனி என்று பெயர் சூட்டப்பட்டது.

தற்போது இந்தத் தவளைகள், சீனா முதல் தாய்லாந்து வரையிலான பகுதிகளில் இருப்பதாக நம்பப்படுகிறது.

இருந்தபோதும், இந்தத் தவளைகள் குறித்து ஆய்வுசெய்யப்பட்டதில், இவற்றை புதிய இனமாகவே வரையறுக்கலாம் என தெரியவந்துள்ளது.

தரையிலிருந்து சுமார் 6 மீட்டர் உயர்த்திற்கு மேல் அமைந்திருக்கும் மரத்துளைகளில் இந்த மிகச் சிறிய தவளைகள் வசிக்கின்றன.

இதன் காரணமாகவே இத்தனை ஆண்டுகளாக அவை கண்டுபிடிக்கப்படாமல் இருந்துள்ளன.

இந்தத் தவளைகள் இவ்வளவு உயரத்தில் வசிப்பது மட்டும் விசித்திரமானதல்ல; இந்த இனத்தில் பெண் தவளைகள் தாங்கள் வசிக்கும் மரப்பொந்தில் தேங்கியிருக்கும் தண்ணீரில்தான் முட்டைகளை இடுகின்றன.

அவற்றிலிருந்து தலைப்பிரட்டைகள் எனப்படும் தவளைக் குஞ்சுகள் வெளியான பின், பொரிக்காத முட்டைகளை அவற்றுக்கு உணவாகக் கொடுக்கின்றன.

பிற தவளைகளைப் போலில்லாமல், இந்தத் தவளைகள் பெரிதாக வளர்ந்த பிறகும் பூச்சி, புழுக்களை உண்பதில்லை. பதிலாக தாவரங்களையே உணவாகக் கொள்கின்றன.

இந்தத் தவளைகள், 2007ஆம் ஆண்டில், வேறு மிருகங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கும்போது எதேச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்டன.

டில்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் பிஜு, இந்தியாவில் வசிக்கும் சுமார் 350 தவளை இனங்களில் 89 தவளை இனங்களைக் கண்டுபிடித்தவர்.

இதனால், இந்தியாவின் தவளை மனிதன் என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.

டிஎன்ஏ ஆய்வின் மூலம் இந்தத் தவளைகள் புதிய பிரிவைச் சேர்ந்தவை என பேராசிரியர் பிஜுவும் அவரது குழுவினரும் கண்டறிந்துள்ளனர். ஆகையால் இதற்குப் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பிரஸ்ஸல்ஸ் நகரில் பேராசிரியர் பிஜு படிக்கும்போது அவருக்கு வழிகாட்டியாக இருந்த ஃப்ராங்கி போஸித்தின் பெயரைச் சேர்த்து, இந்தத் தவளைக்கு ஃப்ராங்கிஸாலஸ் ஜெர்தோனி என பெயர் அளிக்கப்பட்டிருக்கிறது.

 

 
தகவல் BBC


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்