டயரபாவில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்​கை: ஆர்ப்பாட்டங்கள்,கண்டனப் பேரணிகளுக்கு  தடை

டயரபாவில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்​கை: ஆர்ப்பாட்டங்கள்,கண்டனப் பேரணிகளுக்கு தடை

டயரபாவில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்​கை: ஆர்ப்பாட்டங்கள்,கண்டனப் பேரணிகளுக்கு தடை

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2016 | 7:59 pm

வெலிமடை- டயரபா தோட்டத்திலுள்ள மதுபானசாலைக்குள் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்த இளைஞன் உயிரிழந்ததை அடுத்து குறித்த மதுபானசாலை மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவத்தை அடுத்து பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 31 ஆம் திகதி டயரபா தோட்டத்திலுள்ள மதுபான சாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 28 வயதான காந்தி விஜயசந்திரன் என்ற இளைஞன் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும் , குறித்த இளைஞன் சிகிச்சைபலனின்றி நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.

இளைஞன் உயிரிழந்ததாக தகவல் வெளியானதை அடுத்து சிலர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற மதுபான சாலையை நேற்றிரவு சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து வெளிமடை டயரபா சந்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும், பொலிஸ் கலகத்தடுப்புப் பிரிவினரும் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இளைஞனின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டயரபா தோட்ட மக்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் டயரபா பகுதியில் வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீதிக்கு குறுக்காக மரங்களும் போடப்பட்டிருந்தன.

இதேவேளை, உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனை பதுளை வைத்தியசாலையில் இன்று நடைபெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 2 சந்தேகநபர்கள் இன்று பண்டாரவளை நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை இம்மாதம் 25 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெலிமடை டயரபா சந்தியில் அமைந்துள்ள குறித்த மதுபானசாலையை மூடுமாறு வலியுறுத்தி கடந்த 4 ஆம் திகதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிபிபடத்தக்கதாகும்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இந்த சம்பவம் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

இதேவேளை நாளைய தினம் வெலிமடை டயரபா தோட்டத்தில் எதிர்ப்புப் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அங்கு எதிர்ப்பு பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்தே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்