புதிய அரசியலமைப்பை ஸ்தாபிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

புதிய அரசியலமைப்பை ஸ்தாபிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Jan, 2016 | 9:18 pm

புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிப்பதற்கான பிரேரணை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியல்ல பிரேரணையை நிறைவேற்றினார்.

சில முக்கிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசியலமைப்பை ஸ்தாபிப்பதற்கான தேவை எழுந்ததாக இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்து செய்தல், விருப்பு வாக்கு முறையை நீ்க்கி மக்கள் பிரதிநிதித்துவத்தை நியாயமான முறையில் உறுதிப்படுத்தும் தேர்தல் முறையொன்றை உருவாக்கல், அனைத்து பிரஜைகளினதும் ஜனநாயக உரிமையை வலுப்படுத்துதல், தேசிய பிரச்சினைக்கு அரசியலமைப்பின் ஊடாக தீர்வொன்றை வழங்குதல் போன்ற விடயங்கள் அவற்றுள் அடங்குகின்றன.

புதிய அரசியலமைப்பின் சட்ட மூலத்தைத் தயாரிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி அரசியலமைப்பு சபை என்ற பெயரில் செயற்குழுவொன்றை நியமிப்பதற்கும் இதில் பிரேரிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகரின் தலைமையிலான இந்த செயற்குழுவில் 7 பிரதித்தலைவர்கள் இடம்பிடித்துள்ளனர்.

அரசியலமைப்பு சபையின் ஊடாக மற்றுமொரு உப குழு நியமிக்கப்படவுள்ளதுடன், பிரதமர் தலைமையிலான நடவடிக்கை குழுவும் இதில் அடங்குகின்றது.

ஏனைய உறுப்பினர்களாக சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், நீதியமைச்சர் மற்றும் அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்படும் 17க்கு மேற்படாத உறுப்பினர்கள் இதில் உள்ளடக்கப்படவுள்ளனர்.

அரசியலமைப்பு சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்காக நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளது.

மக்கள் கருத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சபையின் நடவடிக்கைகளை மக்கள் அறிந்து கொள்ளமுடியும்.

உப குழுக்களின் நடவடிக்கைகளை எழுத்து மூலமாக உடனடியாக அறிவிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.

உப குழு நியமிக்கப்பட்டு 10 வாரங்களுக்குள் அறிக்கையொன்றைத் தயாரித்து நடவடிக்கைக் குழுவிடம் சமர்ப்பிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.

மக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் அரசியலமைப்பு சபையிடம் அரசியலமைப்பு சட்டமூலம் தொடர்பான
அறிக்கையினை நடவடிக்கைக் குழு சமர்ப்பிக்க வேண்டும்.

குறித்த அறிக்கை மற்றும் சட்டமூலத்தை அரசியலமைப்பு சபை விவாதத்திற்கு உட்படுத்தி, திருத்தங்களை ஆராய்ந்து மீண்டும் அதனை அவையில் சமர்ப்பிக்க வேண்டும்.

அதன் பின்னர் புதிய அரசியலமைப்பு சட்டமூலம் மற்றும் இறுதி அறிக்கையை அரசியலமைப்பு சபையின் அனுமதிக்காக சமர்ப்பிக்க வேண்டும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அமைச்சரைவையில் மீண்டும் அது சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அதன்பின்னரே சட்டமூலம் தொடர்பில் வர்த்தமானியில் அறிவிக்கப்படும்.

அதேவேளை, இந்த சட்டமூலம் அனைத்து மாகாண சபைகளுக்கும் ஜனாதிபதியால் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

அதன் பின்னர் பிரதமரினால் புதிய அரசியலமைப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

இந்த நடவடிக்கைகளுக்கு பாராளுமன்றத்தின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமரின் உரையின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அரசியலமைப்பை ஸ்தாபிக்கும் திட்டம் தொடர்பில் விசேட உரையொன்றை ஆற்றினார்.

உரையினை காணொளியில் காண்க….


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்