தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு காணிகளை விடுவிக்க அமைச்சரவை தீர்மானம்

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு காணிகளை விடுவிக்க அமைச்சரவை தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

07 Jan, 2016 | 7:47 pm

வடக்கில் இதுவரை விடுவிக்கப்படாதுள்ள காணிகளை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் படிப்படியாக விடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மக்களை மீள்குடியேற்றத் தகுதியான இடங்களை அடையாளம் கண்டு மீள்குடியமர்த்தவுள்ளதாகவும் இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

நல்லிணக்கம் மற்றும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் யுத்தத்தின் போது உள்ளக இடம்பெயர்விற்கு உள்ளான மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவது முக்கியமானது என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் அதனைப் பரிந்துரை செய்துள்ளதாக இன்று வெளியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானங்கள் உள்ளடங்கிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது சொந்தக் காணிகள் இதுவரை விடுவிக்கப்படாமையின் காரணமாக யாழ். மாவட்டத்தில் பல குடும்பங்கள் நலன்புரி முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் வாழ்ந்துவருவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றம், சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அமைச்சரவைக்கு தாக்கல் செய்திருந்த அமைச்சரவைப் பத்திரத்தைக் கருத்திற்கொண்டு மக்களை மீள்குடியேற்றுவதற்காக தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் காணிகளை விடுவிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்