ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்ய முயன்றவருக்கு மன்னிப்பு?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்ய முயன்றவருக்கு மன்னிப்பு?

எழுத்தாளர் Bella Dalima

07 Jan, 2016 | 9:38 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலைசெய்ய முற்பட்டமை தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட பிரதிவாதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கத் தயாராகி வருவது இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரியவந்தது.

இந்தக் குற்றவாளிக்கு 10 வருட சிறைத்தண்டனையும், 10,000 ரூபா அபராதமும் மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தண்டனை மற்றும் அபராதத்திற்கு எதிராக பிரதிவாதி தாக்கல் செய்திருந்த மேன்முறையீடு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் விஜித் மலல்கொட மற்றும் தேவிகா லிவேரா டி தென்னக்கோன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இந்த மேன்முறையீடு விசாரணைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது, தனக்குக் கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம், இந்த நபருக்கு மன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி தயாராவதாகவும், அதன் காரணமாக மேன்முறையீட்டை வாபஸ் பெறுவதாகவும் பிரதிவாதி சார்பாக ஆஜரான சட்டத்தரணி யூ.ஆர். டி. சில்வா நீதிமன்றத்தில் அறிவித்தார்.

பொலன்னறுவை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மேலும் இருவருடன் இணைந்து ஜனாதிபதியைக் கொலைசெய்ய முயற்பட்டதாக பிரதிவாதி மீது குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் அந்த நபரை குற்றவாளியாகத் தீர்மானித்து கொழும்பு மேல்நீதிமன்றம் தண்டனை விதித்திருந்தது.

இதேவேளை, மேன்முறையீடு செய்தவரே அதனை வாபஸ் பெறுவதாயின், அதுகுறித்து தனக்கு ஆட்சேபனையில்லை என்று அரசாங்கத் தரப்பில் ஆஜரான பிரதி சொலிஸ்டர் நாயகம் ஏ.எச்.என். நவாவி நீதிமன்றத்தில் அறிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்