யாழ்ப்பாணம், தலைமன்னாரில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம், தலைமன்னாரில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம், தலைமன்னாரில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Bella Dalima

05 Jan, 2016 | 6:36 pm

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மற்றும் தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவு மீனவர்களால் நேற்று (04) பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட 8 இந்திய மீனவர்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

யாழ். கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களும் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்திய மீனவர்கள் நால்வரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
ஊர்காவற்றுறை நீதவான் மொஹமட் ரியாஸ் இதன்போது உத்தரவிட்டார்.

காரைநகருக்கு வடக்கேயுள்ள கடற்பரப்பில் நேற்று ​கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களும் யாழ். கடற்றொழில் திணைக்களத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நேற்றிரவு கைது செய்யப்பட்ட குறித்த இந்திய மீனவர்களிடமிருந்து படகும் மீன்பிடி உபகரணங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டதாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் ரமேஸ் கண்ணா தெரிவித்தார்.

இதேவேளை, தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 3 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மூவரும் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் படகு மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டது.

முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்களையும்
எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், மிரிஹானை தடுப்பு முகாம் ஊடாக குறித்த மீனவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்களும் அவர்களின் ட்ரோலர் படகும் நேற்று மாலை முல்லைத்தீவு மீனவர்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்