சித்திரவதைக்கூடமாக பயன்படுத்தப்பட்ட வீட்டில் தடயங்கள் அகற்றப்பட்டுள்ளதாக எஸ்.சஜீவன் தெரிவிப்பு

சித்திரவதைக்கூடமாக பயன்படுத்தப்பட்ட வீட்டில் தடயங்கள் அகற்றப்பட்டுள்ளதாக எஸ்.சஜீவன் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

05 Jan, 2016 | 10:09 pm

வலிகாமம் வடக்கில் சித்திரவதைக்கூடமாக பயன்படுத்தப்பட்டுள்ளமைக்கான தடயங்கள் காணப்படுவதாகத் தான் கடந்த வாரம் தெரிவித்திருந்த வீட்டில் இன்று தடயங்கள் அகற்றப்பட்டுள்ளதாக வலி. வடக்கு மீள்குடியேற்ற குழுத் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்தார்.

யாழ். வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு பகுதிகளில் படையினர் வசமிந்த 701.5 ஏக்கர் காணி கடந்த 29 ஆம் திகதி விடுவிக்கப்பட்டது.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு வீமன் காமம் பகுதியில் சித்திரவதைக்கூடமாக பாவிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இரண்டு வீடுகளைக் கண்டுகொள்ள முடிந்ததாக வலி. வடக்கு மீள்குடியேற்ற குழுத்தலைவர் எஸ்.சஜீவன் கடந்த சனிக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

எனினும், இன்று அந்த வீட்டில் இருந்த தடயங்கள் அகற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் நாம் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீரவிடம் வினவினோம்.

இராணுவ முகாமில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ ஆய்வுக்கூடம் தொடர்பிலேயே சிலர் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மருத்துவ ஆய்வுக்கூடத்தை எல்.ரி.ரி.ஈயினரின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்காகவே முட்கம்பிகள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

தற்போது பொதுமக்கள் மீள்குடியேறுவதற்காக காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதால் அந்த முட்கம்பிகள் அகற்றப்பட்டு கட்டிடம் சுத்தப்படுத்தப்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர மேலும் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்