சிங்கராஜ வனத் திட்டம்: காணிகளுக்கான உரிமம் வழங்கப்படாமையே சிக்கலுக்கான காரணம்

சிங்கராஜ வனத் திட்டம்: காணிகளுக்கான உரிமம் வழங்கப்படாமையே சிக்கலுக்கான காரணம்

எழுத்தாளர் Bella Dalima

05 Jan, 2016 | 10:25 pm

சிங்கராஜ வனத்தை விரிவுபடுத்தும் திட்டத்தின் கீழுள்ள காணிகள் வன பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் சுவீகரிக்கப்படாததால் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க முடியாமற்போயுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த காணிகளின் உரிமம் வழங்கப்படாமையே இந்த நிலை ஏற்படுவதற்கான காரணம் என வன பாதுகாப்பு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

போவிட்டியாவத்த, ஹந்தபான்எல்ல, மாணிக்கவத்த உள்ளிட்ட சில பகுதிகளில் அண்மைக்காலமாக பாரியளவில் காடழிப்பு இடம்பெற்று வருவதை கடந்த சில தினங்களாக நியூஸ்பெஸ்ட் ஆதாரங்களுடன் அறிக்கையிட்டிருந்தது.

நேற்று (04) நியூஸ்பெஸ்ட் ஒளிபரப்பிய செய்தியைத் தொடர்ந்து காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு இன்று குறித்த காணிகளைக் கண்காணித்தது.

சிங்கராஜ வனத்தை விரிவுபடுத்தும் திட்டத்திற்காக இந்தக் காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் அதனை வன பாதுகாப்பு திணைக்களமே நிர்வகிக்க வேண்டும் என ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

எல்லைகள் குறிக்கப்பட்டதன் பின்னர் காணி சுவீகரிப்பு கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் இந்த காணிகளை சுவீகரிப்பதற்கு வன பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆணைக்குழுவின் இரத்தினபுரி மாவட்டப் பணிப்பா்ளர் பத்மசிறி லியனகே குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், வன பாதுகாப்புத் திணைக்களம் நேற்று நியூஸ்பெஸ்ட்டிற்குத் தெரிவித்ததாவது;

(லக்ஸ்மன் ரத்னவீர – வன இலாகா அதிகாரி)

[quote]அங்கு காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணிகளே உள்ளன. எமக்கு அந்த காணியின் உரிமை இல்லை. அங்கு சிக்கல் உள்ளது. இவர்கள் அதனைக் கருவியாகக் கொண்டு செயற்படுத்தும் விடயங்களுடன் எல்.ஆர்.சியும் இணைந்துள்ளது. இதனை அளந்துள்ளனர். நான் வரைபடத்தைக் கொண்டுவந்துள்ளேன். இந்த காணிகளுக்கான வரைபடங்களைத் தயாரித்து எல்.ஆர்.சி ஊடாக குத்தகைக்குப் பெற முயற்சிக்கின்றனர். எனினும், நாட்டிலுள்ள சட்டத்தை மீற முடியாது. அதாவது எல்.ஆர்.சிக்கு சொந்தமான காணியொன்றை அவர்கள் விரும்பினால் எவருக்கு வேண்டுமானாலும் விற்பதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது. காணியின் உரிமை இல்லாமல் திணைக்களம் என்ற வகையில் நாம் நேரடியாக தலையீடு செய்ய முடியாது.[/quote]

இந்த காடழிப்பு இடம்பெற்றுள்ள பகுதியில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிடமிருந்து சட்டபூர்வமாக குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட காணிகள் போன்றே சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்ட காணிகளும் உள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்