அரசியல் தீர்வுத் திட்ட வரைபைத் தயாரிக்கும் பணிகள் சம்பிரதாயப்பூர்வமாக ஆரம்பம் – த.ம.பே

அரசியல் தீர்வுத் திட்ட வரைபைத் தயாரிக்கும் பணிகள் சம்பிரதாயப்பூர்வமாக ஆரம்பம் – த.ம.பே

எழுத்தாளர் Bella Dalima

02 Jan, 2016 | 9:40 pm

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்ட வரைபைத் தயாரிக்கும் பணிகள் இன்று சம்பிரதாயப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது

அரசியல் தீர்வுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான நிபுணர்கள் அடங்கிய உபகுழு இந்தப் பணிகளை முன்னெடுத்ததாக தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 துறைசார் நிபுணர்கள் அடங்கிய இந்த உபகுழு உள்நாட்டு, வெளிநாட்டு சட்ட நிபுணர்கள் அங்கம் வகிக்கும் ஆலோசனைக் குழுவையும் தன்னகத்தே கொண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உபகுழு தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை, அபிலாஷைகள் என்பவற்றை நிரந்தரமாகப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறை சாத்தியமான சர்வதேசத்தின் ஆதரவைப் பெறக்கூடிய தீர்வுத் திட்டத்தை தயாரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்குள் தயாரிக்கப்படும் தீர்வுத் திட்ட வரைபு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளிடம் கைளிக்கப்படும் எனவும் தீர்வுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் தமிழ் மக்கள் பேரவை கடுமையாக பாடுபடும் எனவும் தமிழ் மக்கள் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்வுத் திட்டம் தொடர்பிலான கருத்துக்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தமிழ் உறவுகள் நிபுணர் குழுவுடன் பகிர்ந்துகொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்