புத்தாண்டில் விபத்துக்கள்: கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20% அதிகரிப்பு

புத்தாண்டில் விபத்துக்கள்: கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20% அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

01 Jan, 2016 | 7:35 pm

புத்தாண்டு தினத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இன்று காலை 5.20 மணியளவில் மருதானை பஞ்சிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர் .

கம்பஹாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ், கொழும்பில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த பஸ்சுடன் மோதியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இதேவேளை, கண்டி – கட்டுகஸ்தோட்ட பிரதான வீதியின் மஹியாவ பகுதியில் இன்று காலை மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமற் போனமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின் நொச்சியாகம, மொரவக்க பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பஸ்சும் லொறியும் மோதியதில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது பின்னால் வந்த லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மூவரும் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை 7 மணி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்த 68 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாகன விபத்துக்களில் 32 பேர் காயமடைந்துள்ளதுடன் மற்றையவர்கள் வேறு விபத்துக்களில் காயமடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் 6 தீ விபத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் திடீர் விபத்து பிரிவில் 531 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், கடந்த இரு தினங்களில் மாத்திரம் 551 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 வீத அதிகரிப்பாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்