2015 ஆம் ஆண்டில் உலகம் – ஒரு பார்வை

2015 ஆம் ஆண்டில் உலகம் – ஒரு பார்வை

2015 ஆம் ஆண்டில் உலகம் – ஒரு பார்வை

எழுத்தாளர் Staff Writer

31 Dec, 2015 | 1:29 pm

2015 ஆம் ஆண்டானது உலகளாவிய ரீதியில் பல்வேறு விடயங்களைத்  தடம் பதித்து விடைபெற்று செல்கின்றது. அது தொடர்பான பதிவு இதோ….

ஜனவரி 1 – இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மதம் மாறி ஜெபருன்னிசாவை திருமணம் செய்து கொண்டார்.

ஜனவரி 7 – பரிஸில் உள்ள சர்ச்சைக்குரிய சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் நான்கு கார்ட்டூன் கலைஞர்கள் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.

ஜனவரி 23 – சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா தனது 90 வயதில் மரணமடைந்தார். தனது கடைசிக்காலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உத்தரவைப் பிறப்பித்தவர் மன்னர் அப்துல்லா.

ஜனவரி 24 – பழம்பெரும் நடிகர் வி.எஸ். ராகவன் தனது 89வது வயதில் காலமானார்.

ஜனவரி 26 – இந்தியக் குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கலந்து கொண்டார். அமெரிக்க அதிபர் ஒருவர் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது இதுவே முதல் முறையாகும்.

மார்ச் 23 – சிங்கப்பூரின் சிற்பி, தமிழர்கள் மீதும் அவர்களின் உழைப்பு மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்த லீ குவான் யூ மரணமடைந்தார்.

மார்ச் 23 – பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் ஜெர்மனி பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 150 பேர் பலியானார்கள்.

மார்ச் 29 – அவுஸ்திரேலியாவில் நடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மைக்கேல் கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலியா அணி தனது 5வது உலகக் கிண்ணத்தை வென்றது.

ஏப்ரல் 7 – ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 பேரை ஆந்திர போலீஸார் குருவியைச் சுடுவது போல சுட்டுக் கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏப்ரல் 8 – பிரபல பாடகர் நாகூர் இ.எம். ஹனீபாவும், எழுத்தாளர் ஜெயகாந்தனும் இன்று மரணத்தைத் தழுவினர்.

ஏப்ரல் 24 – நேபாளத்தை மிகப் பெரிய நிலநடுக்கம் உலுக்கியது. ரிக்டர் அளவுகோலில் 7.9 என்று பதிவாகிய அந்த நிலநடுக்கத்தில் சிக்கி 4000 பேர் பலியானார்கள்.

ஏப்ரல் 30 – பாகிஸ்தான் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மலாலாவை சுட்டுக் கொல்ல முயன்ற 10 தலிபான் தீவிரவாதிகளுக்கும் தலா 25 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மே 2 – மறைந்த இளவரசி டயானா மற்றும் இளவரசர் சார்லஸ் தம்பதிகளின் மகன் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே இத்தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

மே 6 – 2002 ஆம் ஆண்டு நடந்த கார் விபத்து வழக்கில் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என்று அறிவித்த மும்பை விசாரணை நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

மே 8 – இங்கிலாந்து தேர்தலில் பிரதமர் ஜேம்ஸ் கேமரூன் தலைமையிலான கட்சிக்கு மீண்டும் வெற்றி கிடைத்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

மே 11 – சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்து பரபரப்பு தீர்ப்பை அளித்தது.

மே 16 – எகிப்து நாட்டின் முதலாவது ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி முகம்மது மோர்சிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மே 23 – ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.

ஜூன் 21 – முதலாவது சர்வதேச யோகா தினம் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டது

ஜூலை 4 – மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் 81வது வயதில் மரணமடைந்து இசை ரசிகர்களைக் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தினார்.

ஜூலை 4 – சூதாட்டப் புகார்கள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் 2 ஆண்டுகள் கலந்து கொள்வதிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

ஜூலை 4 – நாசாவின் நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் புளூட்டோ கிரகத்தை நெருங்கி புதிய வரலாறு படைத்தது.

ஜூலை 27 – மக்களின் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் ஷில்லாங்கில், மாணவர்களிடையே உரையாற்றியபோது திடீரென மரணமடைந்தார்.

ஜூலை 29 – மலேசியா ஏர்லைன்ஸ் எம்எச் 370 விமானத்தின் சிதறல் பாகங்கள் இந்தியப் பெருங்கடலில் உள்ள ரீயூனியன் தீவுக்கு அருகே செயின்ட் ஆன்ட்ரே தீவின் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஓகஸ்ட் 11 – கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார்.

ஓகஸ்ட் 17 – தாய்லாந்தின் பாங்காக் நகரில் உள்ள எரவான் இந்து ஆலய வளாகத்தில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

ஓகஸ்ட் 24 – வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சிரியாவின் பல்மைரா நகரின் பால்ஸாமின் கோவில் மற்றும் பல வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தொன்மையான நாகரீக சின்னங்களையும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அழித்தனர்.

செப்டம்பர் 2 – சிரியாவைச் சேர்ந்த 3 வயது சிறுவன் ஐலான், தனது குடும்பத்தினருடன் படகில் துருக்கிக்கு அகதியாக வந்தபோது, படகு கடலில் கவிழ்ந்ததில் ஐலான் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது உடல் செப்டம்பர் 2 ஆம் திகதி கடற்கரையில் சடலமாக ஒதுங்கிய காட்சியைப் பார்த்து உலகமே அதிர்ந்து போனது.

செப்டம்பர் 7 – எங்களுடன் போரிட்டால் இந்தியாவுக்கு தாங்க முடியாத பேரிழப்பு ஏற்படும் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஷெரீப் விடுத்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

செப்டம்பர் 10 – ஹோமோ நலடி என்ற புதிய வகை மனித இனம் குறித்த ஆதாரம் கிடைத்தது. தென் ஆபிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் கிட்டத்தட்ட 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹோமோ நலடி வகை மனிதனின் எலும்பு மிச்சங்கள் சிக்கின.

செப்டம்பர் 11 – சவுதி அரேபியாவில் மெக்கா பெரிய மசூதி வளாகத்தில் இராட்சத கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் 107 பேர் பலியானார்கள். 100 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

செப்டம்பர் 20 – இந்திய கிரிக்கெட் சபைத் தலைவராக இருந்த ஜக்மோகன் டல்மியா உடல் நலக்குறைவு காரணமாக தனது 75வது வயதில் கொல்கத்தாவில் மரணமடைந்தார்.

செப்டம்பர் 28 – செவ்வாய் கிரகத்தில் திரவ நிலையிலேயே தண்ணீர் இருப்பதாக நாசா அறிவித்தது.

ஒக்டோபர் 4 – இந்திய கிரிக்கெட் சபைத் தலைவராக மீண்டும் சஷாங் மனோகர் தேர்வு செய்யப்பட்டார்.

ஒக்டோபர் 10 – நகைச்சுவை பேரரசி நடிகை மனோரமா மரணமடைந்தார்.

ஒக்டோபர் 15 – இந்திய வேகப் பந்து வீச்சாளர் சகீர் கான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

ஒக்டோபர் 20 – இந்தியாவின் அதிரடி வீரர் வீரேந்திர ஷெவாக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

ஒக்டோபர் 29 – நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா குமார் மரணமடைந்தது மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

நவம்பர் 13 – பரிஸில் நடந்த மிகப் பெரிய தீவிரவாதத் தாக்குதலில் 120க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பரிஸ் மட்டுமல்லாமல் வடக்கில் உள்ள செயின்ட் டெனிஸ் நகரிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

நவம்பர் 15 – தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழையினால் தமிழகம் பாரிய அழிவை சந்தித்தது.

நவம்பர் 17 – பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் மரணமடைந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்