2015 அரச தொலைக்காட்சி விருது வழங்கும் விழா: 9 விருதுகளை சுவீகரித்த நியூஸ்பெஸ்ட், சிரச, சக்தி

2015 அரச தொலைக்காட்சி விருது வழங்கும் விழா: 9 விருதுகளை சுவீகரித்த நியூஸ்பெஸ்ட், சிரச, சக்தி

எழுத்தாளர் Bella Dalima

29 Dec, 2015 | 10:21 pm

2015 அரச தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் நியூஸ்பெஸ்ட், சக்தி, சிரச ஊடக வலையமைப்பு 9 விருதுகளை சுவீகரித்துக்கொண்டது.

2015 அரச தொலைக்காட்சி விருது வழங்கும் விழா, தாமரைத்தடாகம் கலையரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

சிறந்த தொலைக்காட்சி கல்வி மற்றும் கலாசார நிகழ்ச்சிக்கான விருது நியூஸ்பெஸ்ட்டின் ராஜேந்திரன் கோகுல்நாத் வசமானது.

மலையக பாரம்பரிய கலை வடிவமான காமன்கூத்து தொடர்பிலான தொகுப்பினை தயாரித்து வழங்கிய சக்தி ரிவி நியூஸ்பெஸ்ட் முகாமையாளர் இராஜேந்திரன் கோகுல்நாத் ஜனாதிபதியிடமிருந்து அந்த விருதினைப் பெற்றுக்கொண்டார்.

சிறந்த தமிழ் மொழிமூல செய்தி அறிக்கையிடலுக்கான விருதினை இரணைமடு நீர் விநியோகம் தொடர்பிலான செய்தித் தொகுப்பை தயாரித்த நியூஸ்பெஸ்ட்டின் செய்தித் தயாரிப்பாளர் ரியாஸ் ஹாரிஸ் வெற்றிகொண்டார்.

2015 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் மொழிமூல நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருது சக்தி ரிவியின் சுஹைல் இஸ்மாயிலுக்குக் கிடைத்தது.

சக்தி ரிவி தயாரிப்பு முகாமையாளர் ஷியா உல் ஹசன் அந்த விருதினைப் பெற்றுக்கொண்டார்.

சிறந்த தமிழ் இசை நிகழ்ச்சிக்கான விருதை மூன்றாவது தடவையாகவும் சக்தி ரிவி சுவீகரித்தது.

சக்தி ரிவியின் ஜூனியர் சுப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் இயக்குனரும் ஸ்டைன் கலையக தயாரிப்பு முகாமையாளருமான ஷியா உல் ஹசன் இரண்டு விருதுகளையும் வெற்றிகொண்டார்.

சிறந்த கிராஃபிக் படைப்புக்கான விருது சிரச ரிவிக்குக் கிடைத்தது.

விருதினை சிரச ரிவி அலைவரிசை சார்பில் சிசில் ரத்நாயக்க பெற்றுக்கொண்டார்.

சிறந்த தொலைக்காட்சி முன்னோடி பிரசாரத்திற்கான விருது சிரச லக்ஸபதி நிகழ்ச்சிக்குக் கிடைத்தது.

விருதை சிரச ரிவியின் சமின் பஸ்நாயக்க பெற்றுக்கொண்டார்

2015 அரச தொலைக்காட்சி விருது வழங்கல் விழாவில், சிறந்த ”டப்பிங்” நிகழ்ச்சிக்கான விருது ”லைஃப் ஒஃப் பய்” தொலைக்காட்சி நாடகத்திற்குக் கிடைத்தது.

அந்த விருதை காஞ்சன அமரரத்ன பெற்றுக்கொண்டார்.

இலங்கைக்கு தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தி அதன் முன்னேற்றத்திற்கு அளப்பரிய சேவையாற்றிய ஷான் விக்ரமசிங்கவுக்கு இம்முறை அரச விருது வழங்கல் விழாவில் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்