இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜெயலலிதா இந்திய பிரதமருக்கு மீண்டும் கடிதம்

இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜெயலலிதா இந்திய பிரதமருக்கு மீண்டும் கடிதம்

இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜெயலலிதா இந்திய பிரதமருக்கு மீண்டும் கடிதம்

எழுத்தாளர் Staff Writer

19 Dec, 2015 | 7:42 am

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

ஜெகதாப்பட்டிணத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் நேற்று (17) முன்தினம் காங்கேசன்துறை பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதை தமிழக முதல்வர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது பாரம்பரிய பகுதியில் அமைதியான முறையில் தமது வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது துரதிஷ்டவசமானது என முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் வலியுறுத்தியுள்ளார்.

பண்டிகை காலம் நெருங்கும் தருவாயில் மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படுவதும் , படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றமையும் மீனவர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக முதல்வர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த விவகாரம் தொடர்பில் இலங்கை தரப்பினருடன் கலந்துரையாடி மீனவர்களையும, அவர்களின் படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியை முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

மீனவர்களின் பிரச்சினையை முற்றிலும் தீர்ப்பதற்கு மத்திய அரசு தீர்க்கமான தீர்வை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மீனவர் விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ள 78 மீனவர்களையும், அவர்களின் 38 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் கடிதத்தின் மூலம் எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் பல தடவைகள் தெளிவுப்படுத்திய போதிலும் பிரதமர் தர்ப்பிலிருந்து உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் பிரதமர் நேரடியாக தலையிட்டு வெளியுறவுத்துறை ரீதியாக மாத்திரமின்றி உயர்மட்ட அரசியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் தனது கடிதத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்