2015 ஆம் ஆண்டில் விளையாட்டு உலகம் படைத்த சாதனைகள் ஒரு பார்வை

2015 ஆம் ஆண்டில் விளையாட்டு உலகம் படைத்த சாதனைகள் ஒரு பார்வை

2015 ஆம் ஆண்டில் விளையாட்டு உலகம் படைத்த சாதனைகள் ஒரு பார்வை

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2015 | 9:33 am

2015 ஆம் ஆண்டில் விளையாட்டு உலகம் பல  மறக்க முடியாத சாதனைகளை  கண்டது.

பல புதிய சாதனைகள் படைக்கப்ட்டன. பல பழைய சாதனைகள் தகர்க்கப்பட்டன. கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து என சகல விளையாட்டிலும் சாதனைகள் படைக்கப்பட்டன.

சரித்திரம் படைத்த குமார் சங்கக்கார

இலங்கை வீரர் குமார் சங்கக்கார உலகக்கிண்ண மற்றும் ஒரு நாள் போட்டி வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்தடுத்து நான்கு சதம் அடித்து அசத்தி புதிய உலக சாதனையை நிகழ்த்தினார்.

அணித் தலைவராக கோஹ்லியின் சாதனை

டெஸ்ட் அணித் தலைவராக இந்தியாவின் விராத் கோஹ்லி சாதனை படைத்த ஆண்டு இது, ஒரு அணித் தலைவராக அடுத்தடுத்து தொடர்ந்து நான்கு சதங்கள் போட்டு சாதனை படைத்தார். இப்படி அடுத்தடுத்து நான்கு சதங்களை அடித்த முதல் டெஸ்ட் தலைவர் என்ற சாதனை கோஹ்லிக்குச் சொந்தமானது.

களத்தடுப்பில் அசத்திய ரஹானே

களத்தடுப்பில் புதிய சாதனை படைத்தார் ரஹானே. ரஹானே, ஆகஸ்ட் 14 ஆம் திகதி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது 8 பிடியெடுப்புக்களை நிகழ்த்தி அசத்தினார். கீப்பர் அல்லாத ஒரு களத்தடுப்பாளர் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக அளவிலான பிடியெடுப்புக்களை நிகழ்த்துவது அதுவே முதல் முறையாகும். அந்த வகையில் அது சாதனையாக அமைந்தது.

பிரமிக்க வைத்த டிவில்லியர்ஸ்

தென் ஆப்பிரிக்க சூப்பர் ஸ்டார் ட வில்லியர்ஸ், ஜனவரி 18 ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் வெறும் 31 பந்துகளில் சதம் போட்டு உலக சாதனை படைத்தார்.

கெய்லின் உலக சாதனை

பெப்ரவரி 24 ஆம் திகதி நடந்த உலகக்கிண்ணப் போட்டியின்போது சிம்பாப்வேயை போட்டுப் புரட்டி எடுத்து விட்டார் கிறிஸ் கெய்ல். 147 பந்துகளைச் சந்தித்த அவர் 215 ஓட்டங்களை குவித்து உலகக்கிண்ண வரலாற்றில் முதல் முறையாக அதி வேக இரட்டை சதம் போட்டு உலக சாதனை படைத்தார்.

ஜெகோவிச் சாதனை

சேர்பியாவின் நொவெக் ஜெகோவிச், தனது 5 ஆவது அவுஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றார். ஓபன் எரா காலத்தில் 5 அவுஸ்திரேலிய பட்டங்களை வென்ற முதல் வீரர் ஜெகோவிச்தான்.

105 வயதில் ஓட்டப் போட்டியில் அசத்திய  மியாஸாகி

இளைய தலைமுறை மட்டுமல்ல, மூத்த குடிமகன் ஒருவரும் விளையாட்டில் வரலாறு படைத்தார். ஜப்பானைச் சேர்ந்த ஹிடோகிசி மியாஸாகி என்பவர் 105 வயதில் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு 42.22 விநாடிகளில் போட்டி தூரத்தைக் கடந்து அசத்தினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்