இணக்கப்பாடின்றி முடிந்தது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை

இணக்கப்பாடின்றி முடிந்தது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை

எழுத்தாளர் Bella Dalima

18 Dec, 2015 | 9:46 pm

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான இன்றைய பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளது.

தொழிற்சங்கங்களின் கோரிக்கைக்கு முதலாளிமார் சம்மேளனத்தால் இணக்கப்பாடு தெரிவிக்கப்படாத நிலையில், பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டதாக இலங்கை தேசிய தொழிலாளர் சங்க நிர்வாக செயலாளரும் ஊவா மாகாண சபை உறுப்பினருமான வேலாயுதம் ருத்திரதீபன் தெரிவித்தார்.

தொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு காணப்படும் வரை தற்காலிக முற்கொடுப்பனவாக 100 ரூபா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு ஏற்கனவே தொழிற்சங்கங்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையும் முதலாளிமார் சம்மேளனம் நிராகரித்துள்ளது.

எனினும், தொழிலாளர்களுக்கான தற்காலிகக் கொடுப்பனவு தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானம் அறிவிக்கப்படும் என தொழில் அமைச்சர் குறிப்பிட்டதாக இலங்கை தேசிய தொழிலாளர் சங்க நிர்வாக செயலாளர்
தெரிவித்தார்.

இதேவேளை, அமைச்சினால் முன்வைக்கப்படும் கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் ஏற்றுக்கொள்ளாவிடின் தோட்ட நிர்வாகங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் தெரிவித்ததாக இலங்கை தேசிய தொழிலாளர் சங்க நிர்வாக செயலாளர் குறிப்பிட்டார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்