தமிழ் அரசியல் கைதிகள் 13 பேர் நீதிமன்றில் ஆஜர்

தமிழ் அரசியல் கைதிகள் 13 பேர் நீதிமன்றில் ஆஜர்

எழுத்தாளர் Bella Dalima

16 Dec, 2015 | 8:18 pm

தமிழ் அரசியல் கைதிகள் 13 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் ஊடக செயலாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டார்.

நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டவர்களில் சிலருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 13 தமிழ் கைதிகளே இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்த தமிழ் கைதிகள் இருவரும் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளனர்.

கைதிகளின் கோரிக்கை தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பிற்பகல் 3 மணியளவில் உண்ணாவிரதம் கைவிடப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளரின் ஊடக செயலாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டார்.

அதற்கமைய, உண்ணாவிரதமிருந்த கைதிகளின் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிடச் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்தன் மற்றும் அமல் வியாழேந்திரனிடமும் உண்ணாவிரதம் கைவிடப்பட்டமை குறித்து கைதிகள் தெரிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்