சவாலை எதிர்நோக்கிய மாணவர்கள்: கரைசேர்த்த இடர் முகாமைத்துவ மத்திய நிலைய குழுவினர்

சவாலை எதிர்நோக்கிய மாணவர்கள்: கரைசேர்த்த இடர் முகாமைத்துவ மத்திய நிலைய குழுவினர்

எழுத்தாளர் Bella Dalima

16 Dec, 2015 | 10:01 pm

எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டிய தருணங்களில் தான் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

எனினும், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் நான்கு மாணவர்களுக்கு இன்று பாரியதொரு சவாலை எதிர்கொள்ள நேரிட்டது.

மாத்தறை – பிட்டபெத்தர பிரதேசத்தில் அடிக்கடி மழை பெய்வது வழமை என்ற போதிலும், நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக குறித்த நான்கு மாணவர்களின் எதிர்காலம் சவாலுக்குள்ளானது.

பலபத் எல்ல ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்தமையே இதற்குக் காரணமாகும்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் இந்த நான்கு மாணவர்களும் பரீட்சைக்காக இன்று காலை வேளையில் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்துக் காணப்பட்டமையினால் அவர்களது பயணம் தடைப்பட்டது.

எனவே, மாணவர்களைக் கரைசேர்க்கும் முயற்சியில் மாத்தறை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் நாயகம் லெப்டினன் கேர்ணல் பிரியங்கர உபேசிறிவர்தன தலைமையிலான குழு ஈடுபட்டது.

இவர்கள் மாணவர்களைப் பாதுகாப்பாக பிடபெத்தர மகா வித்தியாலய பரீட்சை நிலையத்திற்கு அழைத்துச் சென்றாலும் இன்றைய நாளுக்கான பரீட்சை ஆரம்பமாகி மூன்று மணித்தியாலங்கள் கடந்திருந்தன.

சம்பவம் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ள்யு.எம்.என்.என்.ஜே. புஷ்பகுமாரவை தெளிவுபடுத்திய போது அவரின் ஆலோசனையின்படி அந்த நான்கு மாணவர்களுக்கும் பரீட்சையில் தோற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

அதிக வசதிகளுடன் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மத்தியில், ஆகக்குறைந்த போக்குவரத்து வசதி கூட இல்லாத நிலையிலுள்ள மாணவர்கள் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கு இதுவொரு சிறந்த சான்றாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்