தலைமன்னாரில் கரையொதுங்கிய இந்திய மீனவரின் சடலம் மன்னாரில் அடக்கம்

தலைமன்னாரில் கரையொதுங்கிய இந்திய மீனவரின் சடலம் மன்னாரில் அடக்கம்

தலைமன்னாரில் கரையொதுங்கிய இந்திய மீனவரின் சடலம் மன்னாரில் அடக்கம்

எழுத்தாளர் Bella Dalima

15 Dec, 2015 | 6:08 pm

அண்மையில் தலைமன்னார் கடற்கரையோரத்தில் ஒதுங்கிய ராமேஸ்வரம் மீனவரின் உடல் இன்று மன்னாரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குச் சென்றிருந்த நிலையில் காணாமற்போயிருந்த நான்கு மீனவர்களில் ஒருவரின் உடல் கடந்த மாதம் 29 ஆம் திகதி தலைமன்னாரில் கரையொதுங்கியிருந்தது.

இந்த உடல் அடையாளம் காணமுடியாதவாறு உருக்குலைந்து காணப்பட்டதுடன், இடது கையில் பச்சை குத்தப்பட்டிருந்த பெயரைக்கொண்டு, அது ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவரான ஜாகீர் உசைன் என்பவருடையது என அடையாளம் காணப்பட்டது.

இதனையடுத்து, ராமேஸ்வரம் மீனவர் ஜாகீர் உசைனின் உடலை மன்னாரிலேயே அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க சமாசம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்திய துணைத் தூதரகத்தின் அனுமதியுடன் ஜாகீர் உசைனின் உடல் மன்னார் உப்புக்குளம் முஸ்லிம் மையவாடியில் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய துணைத் தூதரக அதிகாரி, தலைமன்னார் பொலிஸ் உயரதிகாரி ஆகியோர் முன்னிலையில் மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் உறுப்பினர்கள் ராமேஸ்வரம் மீனவரின் உடலைப் பெற்றுக்கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, திரு​கோணமலை கரையோரத்திலும் அண்மையில் சடலமொன்று கரையொதுங்கியிருந்தது.

இந்த சடலத்திற்கு அருகிலிருந்து தமிழக பிரஜை ஒருவரின் வாகன சாரதி அடையாள அட்டையொன்று கண்டெடுக்கப்பட்டிருந்தது.

ஆயினும், அந்த சாரதி அடையாள அட்டை காணாமற்போனமை தொடர்பில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய பேச்சாளர் ஒருவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்