சவுதி உள்ளூராட்சித் தேர்தலில் 20 பெண் வேட்பாளர்கள் வெற்றி

சவுதி உள்ளூராட்சித் தேர்தலில் 20 பெண் வேட்பாளர்கள் வெற்றி

சவுதி உள்ளூராட்சித் தேர்தலில் 20 பெண் வேட்பாளர்கள் வெற்றி

எழுத்தாளர் Bella Dalima

15 Dec, 2015 | 5:08 pm

சவுதி அரேபியாவில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் 20 பெண் வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளதாக அந்நாட்டின் பொதுத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சவுதியில் 284 உள்ளூராட்சி அமைப்புகளுக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. முதல் முறையாக சவுதிப் பெண்கள் அந்தத் தேர்தலில் பங்கேற்றிருந்தனர்.

வாக்களித்ததுடன், உள்ளூராட்சி அமைப்புகளில் கவுன்சிலர் பதவிக்கு 979 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆண் வேட்பாளர்களின் எண்ணிக்கை சுமார் 6,000 என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து இடங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற நிலையில், 20 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் உள்ளூராட்சி அமைப்புகளின் மொத்த இடங்கள் சுமார் 2,100. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் கவுன்சிலர்களின் எண்ணிக்கை சுமார் 1 சதவீதமாக உள்ளது.

முஸ்லிம்கள் மிகப் புனிதமாகக் கருதும் மெக்கா நகரில் உள்ள மத்ராக்கா கவுன்சில் தொகுதியில் போட்டியிட்ட சல்மா பிந்த் அல்-உடேபியின் வெற்றி முதலில் அறிவிக்கப்பட்டது.

அந்நாட்டின் தலைநகர் ரியாத் மிகவும் பழமைவாத நகரம் எனக் கூறப்படுகிறது. அங்கு 4 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஜெட்டா, அல்-ஜாவஃப், தபூக், இஷா உள்ளிட்ட பகுதிகளின் பெண் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
சவுதியில் சிறுபான்மையினராக உள்ள ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் கிழக்கு மாகாணத்தில் 4 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

சாலைகள் அமைத்தல், பச்சிளம் குழந்தைகளுக்கான காப்பகம் அமைத்தல், விளையாட்டரங்கம் அமைத்தல், நகர கழிவகற்றல் ஆகியவை பெண்களின் முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளாக இருந்தன.

முடியாட்சி நடைமுறையில் உள்ள அந்நாட்டில் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்று வருகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் காலமான சவுதி மன்னர் அப்துல்லா, உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பெண்கள் போட்டியிடுவதற்கான அரச கட்டளையை 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட பிறகு நடைபெறும் முதல் உள்ளூராட்சித் தேர்தல் இதுதான்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்