ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசுத்த பாப்பரசரை சந்தித்தார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசுத்த பாப்பரசரை சந்தித்தார்

எழுத்தாளர் Staff Writer

14 Dec, 2015 | 6:00 pm

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வத்திக்கான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசை இன்று (14) சந்தித்துள்ளார்.

வத்திக்கானிலுள்ள விசேட வரவேற்பு மண்டபத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதியின் பிரதி ஊடகப் பணிப்பாளர் நிஷாட் உபேந்திர நியூஸ்பெஸ்ட்டுக்கு கூறினார்.

இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை பரிசுத்த பாப்பரசர் இதன்போது பாராட்டியுள்ளார்.

இலங்கை மக்கள் சிநேகபூர்வமானவர்கள் என்பதை தாம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது வழங்கப்பட்ட வரவேற்பின் ஊடாக உணர்ந்ததாகவும் பரிசுத்த பாப்பரசர் கூறியுள்ளார்.

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பரிசுத்த பாப்பரசரின் ஆசி, துணையாக அமைந்துள்ளதென இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற தலைவர் என்பதை குறிக்கும் வகையில் பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசொன்றையும் வழங்கியுள்ளார்.

இந்த சந்திப்பை அடுத்து வத்திக்கான் பிரதமரையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார்.

இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்திப் பணிகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டதாக ஜனாதிபதியின் பிரதி ஊடகப் பணிப்பாளர் நிஷாட் உபேந்திர மேலும் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்