மெகசின் சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் இருவர் தொடர்ந்தும் உண்ணாவிரதம்

மெகசின் சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் இருவர் தொடர்ந்தும் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Bella Dalima

12 Dec, 2015 | 9:29 pm

கொழும்பு – மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளில் இருவர் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கைதிகளின் கோரிக்கை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறியப்படுத்தியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் ஊடக செயலாளர் துஷார உபுல் தெனிய குறிப்பிட்டார்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளில் ஒருவர் தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, தம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி அறிக்கை
கையளிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த கைதியின் கோரிக்கை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் ஊடக செயலாளர் குறிப்பிட்டார்.

மேலும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும், அமைச்சுக்கும் அறியப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தங்களின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் முடங்கிப் போயுள்ளதாக தமிழ் அரசியல் கைதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, தங்களின் பிரச்சினை குறித்து ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு உடனடித் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் கைதிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்