நாட்டில் தொடர்ச்சியாக மழை: சிரமங்களுக்கு மத்தியில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள்

நாட்டில் தொடர்ச்சியாக மழை: சிரமங்களுக்கு மத்தியில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள்

நாட்டில் தொடர்ச்சியாக மழை: சிரமங்களுக்கு மத்தியில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள்

எழுத்தாளர் Bella Dalima

09 Dec, 2015 | 6:12 pm

நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலையால் சில பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாலை வேளைகளில் பெய்து வரும் கன மழை காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

இதனால் சில பகுதிகளில் தாழ் நிலங்களில் நீர் நிரம்பி காணப்படுகின்றது.

நீர்த்தேக்கங்கள் பெருக்கெடுக்கும் நிலை காணப்படுவதால் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கட்டைக்காடு கிராம சேவகர் பிரிவிலுள்ள சுமார் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளுக்குள் வௌ்ளம் உட்புகுந்தமையினால் பலர் தமது உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

மலையகத்திலும் சில பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.

தொடர்ச்சியான மழை காரணமாக மண்சரிவு மற்றும் வௌ்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடரும் மழையால் விக்டோரியா அணைக்கட்டின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

தெனியாய – பல்லேகம, அல்பந்தெனிய பிரதேசத்தில் வீடு ஒன்று சேதமடைந்துள்ளது.

இதனால் வீட்டில் இருந்த 82 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெனியாய பல்லேகம பிரதான வீதியின் பாதை ஓரங்களில் ஆங்காங்கே மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் தாழ் நிலப்பகுதிகள் பாதிப்படைந்துள்ளன.

வீடுகளுக்குள் நீர் உட்புகுந்துள்ளதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

கிண்ணியா செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாஞ்சோலைச்சேனை, அண்ணல் நகர் ஆகிய கிராமங்களில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்