அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள் நுழையத் தடை விதிக்க வேண்டும் – டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள் நுழையத் தடை விதிக்க வேண்டும் – டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள் நுழையத் தடை விதிக்க வேண்டும் – டொனால்ட் டிரம்ப்

எழுத்தாளர் Bella Dalima

09 Dec, 2015 | 12:38 pm

அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள் நுழையத் தடை விதிக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், பாகிஸ்தான் பெண் தஷ்ஃபீன் மாலிக்கும், அவரது பாகிஸ்தான் வம்சாவளிக் கணவர் ரிஸ்வான் ஃபாரூக்கும் கடந்த வாரம் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.

இது மதவெறி காரணமாக நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள் வருவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு சாரார் எழுப்பினர்.

எனினும், அந்தக் கோரிக்கையை அதிபர் ஒபாமா திட்டவட்டமாக நிராகரித்தார்.

இந்தச் சூழலில், முஸ்லிம்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் என்று அதிரடியாகக் கூறி, டொனால்ட் டிரம்ப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்வுக்கு டிரம்ப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

“பியூ’ ஆய்வு மையம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வு அறிக்கைகளின்படி, பெரும்பாலான முஸ்லிம் மக்கள் அமெரிக்கர்களை வெறுக்கிறார்கள். அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்துவது உலகளாவிய மதப் போரின் ஒரு அங்கம் என ஆய்வில் கலந்துகொண்ட 25 சதவீத முஸ்லிம்கள் கூறியுள்ளனர். எனவே, அவர்கள் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படக்கூடாது என்று டிரம்ப் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொனால்டு டிரம்ப்பின் கருத்துக்கு ஊடகங்களும், அமெரிக்க முஸ்லிம் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

எனினும், அவற்றை அலட்சியம் செய்த டிரம்ப், “எனது கருத்திலிருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. அரசமைப்புச் சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமைகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என ஊடகங்கள் விரும்புகின்றன. நான் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்,” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தனது கொள்கைகள் வெளிநாடுகளிலிருந்து அமெரிக்கா வரும் முஸ்லிம்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், அமெரிக்க முஸ்லிம்களுக்குப் பொருந்தாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, டொனால்ட் டிரம்பின் முஸ்லிம்கள் மீதான வெறுப்பை உமிழும் கருத்தானது, அவர் அமெரிக்க அதிபராக இருக்கத் தகுதியற்றவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக வௌ்ளை மாளிகையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்