தமிழகத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் கரிசனையோடு இருப்பதாக சம்பந்தன் தெரிவிப்பு

தமிழகத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் கரிசனையோடு இருப்பதாக சம்பந்தன் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2015 | 12:21 pm

இந்தியாவின் நான்காவது பெரிய நகரான சென்னையில் ஏற்பட்டுள்ள வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் மிகுந்த கரிசனையோடு உள்ளதாக எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயற்கையின் சீற்றத்தினால் தமது சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அனர்த்ததினால் வாழ்வாதாரங்களையும் சொத்துக்களையும் இழந்து , இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வாழும் மக்களினது துயரில் தாம் பங்கேற்பதாகவும் ,எதிர்கட்சி தலைவர் தமது அறிக்கையின் மூலம் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை தளர்ச்சியடையாமல் வழங்கி கொண்டிருக்கும் தமிழக அரசிற்கும் , ஏனைய அரச மற்றும் தனியார் ஸ்தாபனங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த நிலைமை விரைவில் வழமைக்கு திரும்பி மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு மாறுவதற்கு தாம் இறைவனை பிரார்த்திப்பதாகவும் எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தமது அறிக்கையூடாக சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்