தொடர்ந்தும் வௌ்ளத்தில் தத்தளிக்கும் தமிழகம்

தொடர்ந்தும் வௌ்ளத்தில் தத்தளிக்கும் தமிழகம்

தொடர்ந்தும் வௌ்ளத்தில் தத்தளிக்கும் தமிழகம்

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2015 | 1:43 pm

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் தமிழகம் வரலாறு காணாத அளவில் பாதிக்கப்ட்டுள்ளது. இதனால் நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தமது குடியிருப்புகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

சுமார் 100 வருடங்களின் பின்னர் இந்திய தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வௌ்ள அனர்த்தத்தினால் 188 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

மேலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் பணியின் 13 குழுக்களைச் சார்ந்த 520 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதுடன் 15 குழுக்களை மற்ற மாநிலங்களில் இருந்து அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநில பேரிடர் மீட்புப் படையின் 6 குழுவினரும், கடலோர பாதுகாப்பு படையைச் சார்ந்த 3 குழுக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்காக 126 மோட்டார் படகுகள், 74 சாதாரண படகுகள் என மொத்தம் 200 படகுகள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இயற்கையின் சீற்றத்தில் தடுமாற்றத்தை சந்தித்துள்ள தமிழகத்தை இந்தியப் பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகியோர் ஹெலிகொப்டர் மூலம் பார்வையிடுகின்றனர்.

தாம் இன்றைய தினம் வெள்ளத்தினால் பாதிக்கப்ட்ட பகுதிகளை பார்வையிடச் செல்லவுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது ட்விட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் தமிழக முதலமைச்சர் இன்று பார்வையிடவுள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. நேற்றைய தினம் முதலமைச்சர் பார்வையிடுவதாக இருந்த போதிலும் மோசமான வானிலை காரணமாக ஹெலிகொப்டர் பறக்க முடியாத நிலை காணப்பட்டது.

இதேவேளை வௌ்ள நிலைமை தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

எனினும் எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம் ,புதுச்சேரியில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இதனால் மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்படும் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்ட்ட மக்கள் மேலும் பாதிப்புறும் அபாயமும் உள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு முதல் மழை சற்று குறைவடைந்துள்ள நிலையிலும் வெள்ள நீர் மட்டத்தில் மாற்றம் இல்லை என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னையை அண்டிய பிரதேசங்களில் காணப்படும் 35 நீர் நிலைகள் முற்றிலுமாக நிரம்பியுள்ள நிலையில் அணைகள் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இடைவிடாத மழையினால் கழிவகற்றல் சுழற்சிமுறைமை பெரிதும் பாதிப்படைந்துள்ளதுடன் இது தமக்கு ஏற்பட்டுள்ள கடினமான சூழ்நிலை என சென்னை நகர கூட்டுறவு ஆணையாளர் விக்ரம் கபூர் தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்தான அனைத்து விமான சேவைகளும் முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளதுடன் சென்னை விமான நிலையம் எதிர்வரும் ஆறாம் திகதி வரை மூடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து 70 கிலோமீற்றர் தெற்கில் அமைந்துள்ள அரக்கோணம் கடற்படை விமான நிலையம் மாற்றீடாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீரற்ற காலநிலையால் பெரும்பாலான தொலைத் தொடர்பு சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதால் மக்களின் தொடர்பாடல் பாரிய பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளது.

இதனிடையே, அலுவலகத்தில் பணிபுரிய சென்றவர்கள் இரவில் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல், அலுவலகத்திலேயே தங்கும் சூழலும் ஏற்பட்டது. இன்று காலையில் வசிப்பிடங்களில் இருப்பவர்கள் அலுவலகம் வர முடியாமல் சிரமப்பட்டனர்.

அத்துடன் தமிழக அரசு தனியார் நிறுவனங்கள் பொது விடுமுறை அளிக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வௌ்ள அனர்த்தத்துக்குள்ளாகியுள்ள தமிழகத்துக்கு கர்நாடக அரசு வெள்ள நிவாரண நிதியாக 5 கோடி வழங்க தீர்மானித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்