பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைத்துவத்தை மால்டாவிடம் கையளித்தது இலங்கை

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைத்துவத்தை மால்டாவிடம் கையளித்தது இலங்கை

எழுத்தாளர் Bella Dalima

27 Nov, 2015 | 8:39 pm

இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் தலைமையில் 24 ஆவது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு மால்டாவில் இன்று ஆரம்பமானது.

மால்டாவின் தலைநகர் வெலேட்டாவில் உள்ள மெடிட்டரனியல் மாநாட்டு மண்டபத்தில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 அளவில் மாநாடு ஆரம்பமானது.

மாநாட்டு மண்டபத்திற்கு வருகைதந்த அரச தலைவர்களை பொதுநலவாய அமைப்பின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தற்போதைய தலைவர் மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட்டும் வரவேற்றனர்.

பொதுநலவாய அமைப்பைச் சேர்ந்த 53 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்களும் பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

அரச தலைவர்கள் மாநாட்டு மண்டபத்தில் ஒன்றுகூடிய பின்னர் உலகளாவிய ரீதியில் மக்களின் வாழ்க்கைத்தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்ற தொனிப்பொருளில் மாநாடு ஆரம்பமானது.

இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு;

[quote]இலங்கை, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் ஸ்தாபக உறுப்பு நாடாகும். கடந்த சில வருடங்களாக இந்த அமைப்பு அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். அனைத்து உறுப்பினர்களதும் அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தாக்கம் இருக்கின்றது. எமது தனிப்பட்ட கருத்துக்கள் அல்லாது பொதுவான கருத்தே எம்மை ஒன்று சேர்க்கின்றது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாம் இலங்கையில் சந்தித்தோம். அபிவிருத்தி, சமத்துவம் மற்றும் பங்களிப்பின் ஊடாக பொதுநலவாய அமைப்பின் இலக்குகளை அடைவதற்கு நாம் இணங்கினோம். நிலையான அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கு உள்நாட்டு வெளிநாட்டு பங்களிப்பு மிகவும் முக்கியம் என்பதை நாம் வலியுறுத்தினோம். ஐக்கிய நாடுகள் சபை நிலையான அபிவிருத்திக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது என்பதை நான் கூற விரும்புகிறேன்.[/quote]

இரண்டாவது எலிசபெத் மகாராணியார் தெரிவித்ததாவது;

[quote]பொதுநலவாய நாடுகள் அமைப்பு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு என்றால் அது மிகையாகாது. எனினும், உண்மையான முன்னேற்றத்தை அடைவதற்கு கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். எமது நாடுகளில் சுகாதாரம், சட்டம் மற்றும் நிர்வாகம் ஆகிய துறைகளை வலுப்படுத்துவதற்காக சிவில் அமைப்புக்களைக் கொண்ட வலையமைப்பிற்கு உயிரூட்ட வேண்டும். பொதுநலவாய நாடுகள் அமைப்புடன் பிணைந்துள்ள திறமைகளும் ஆற்றலும் மிகவும் பெறுமதியானவை. இந்த மாநாட்டின்போது பொது நலவாய நாடுகள் நடைமுறை சாத்தியமான தலைமைத்துவத்தை பிரதிபலிக்க வேண்டும். உலக நெருக்கடிகளை அடையாளம் கண்டு உறுப்பு நாடுகளின் பங்களிப்புடன் அதற்கு தீர்வு காண வேண்டும்.[/quote]

இரண்டு வருடங்களாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைத்துவத்தை வகித்த இலங்கை, இம்முறை மாநாட்டின்போது அந்த தலைமைத்துவத்தை உத்தியோகபூர்வமாக மால்டாவிடம் கையளித்தது.

இதற்கமைய, அடுத்த இரண்டு வருடங்களுக்கு அந்த அமைப்பின் தலைவராக மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட் செயற்படவுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகமாக 7 வருடங்கள் கடமையாற்றிய கமலேஷ் சர்மாவின் பதவிக்காலமும் இம்முறை மாநாட்டுடன் நிறைவு பெறவுள்ளது.

இன்று ஆரம்பமான பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

 

chogm1


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்