பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு மால்டாவில் இன்று ஆரம்பம்

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு மால்டாவில் இன்று ஆரம்பம்

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு மால்டாவில் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2015 | 6:44 am

24 ஆவது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு மால்டாவில், அந்த நாட்டு நேரப்படி இன்று (27) காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று (26) மாலை மால்டாவைச் சென்றடைந்தார்.

உலகிற்கு பெறுமதி சேர்க்கும் நோக்கத்துடன் மால்டாவில் இன்று (27) ஆரம்பமாகவுள்ள 24 ஆவது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 29 ஆம் திகதிவரை சென். ஏஞ்சலோ கோட்டையில் நடைபெறவுள்ளது.

53 அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

பொதுநலவாய அமைப்பின் தலைமைத்துவத்தை வகிக்கும் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உட்பட பல அரச தலைவர்கள் மால்டாவை சென்றடைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் ரொஷான் வட்டவல குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் தற்போதைய தலைமைப் பதவியை வகிக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்த இரண்டு வருடங்களுக்கான தலைமைப் பதவியை மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட்டிடம் உத்தியோகபூர்வமாக இன்று ஒப்படைக்கவுள்ளார்.

இதுதவிர பிரான்ஸ் ஜனாதிபதி பிரன்ஸ்வா ஹொலண்டே மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஆகியோரும் இம்முறை பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் விசேட அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்.

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகமாக கடந்த 4 வருடங்களாக கடமையாற்றி வரும் கமலேஷ் ஷர்மாவின் பதவிக்காலமும் இந்த மாநாட்டுடன் நிறைவடைகின்றது.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் எதிர்வரும் நான்கு வருடங்களுக்கான புதிய செயலாளர் நாயகம் ஒருவரும் இம்முறை தெரிவுசெய்யப்படவுள்ளார்.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு முன்னோடியாக வர்த்தக மாநாடு, மகளிர் மாநாடு மற்றும் இளைஞர்கள் மாநாடு என்பனவும் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்