மண்சரிவால் பாதிக்கப்பட்ட மீரியபெத்த மக்களுடன் இன்றைய நாளை பகிர்ந்துகொண்ட சக்தி FM

மண்சரிவால் பாதிக்கப்பட்ட மீரியபெத்த மக்களுடன் இன்றைய நாளை பகிர்ந்துகொண்ட சக்தி FM

எழுத்தாளர் Bella Dalima

21 Nov, 2015 | 9:43 pm

தமிழ் பேசும் மக்களின் சக்தியாய், 17 ஆண்டுகள் கடந்து 18 ஆம் ஆண்டில் தடம்பதித்துள்ள சக்தி FM இன்றைய நாள் முழுவதையும் மீரியபெத்த தோட்டத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுடன் பகிர்ந்து கொண்டது.

கடந்த வருடம் மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் மாகந்த தோட்டத்திலுள்ள பழமையான தேயிலை தொழிற்சாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் தொடர்ந்தும் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் நாட்களை நகர்த்தும் மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதற்கு வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் சக்தி FM அலைவரிசையுடன் இணைந்து ஏனைய நிறுவனங்களும் ஏற்பாடுகளை செய்திருந்தன.

மாகந்த தேயிலை தொழிற்சாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள, 93 குடும்பங்களுக்கு தலா 10,000 ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதி வாய்ந்த உலர் உணவுப் பொருட்கள் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டன.

பாடசாலை மாணவர்களின் எதிர்கால கற்றல் செயற்பாடுகளுக்கு வலுசேர்க்கும் வகையில் 97 மாணவர்களுக்கு சகலவிதமான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

மண்சரிவில் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளுக்கு வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் புலமைப் பரிசில்களை வழங்கியுள்ளது.

அத்துடன், மக்களின் நலன்கருதி பி.ஈ ப்ளஸ் நீர்த்தாங்கிகளும் இதன்போது அன்பளிப்பு செய்யப்பட்டன.

இந்த நிகழ்வில் சக்தி FM உடன் சக்தி TV, நியூஸ்பெஸ்ட், எஸ்லோன் PE+, ICL மற்றும் ஹரிசன் கெமிக்கல்ஸ் உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மாகாராஜா நிறுவனத்தின் ஏனைய நிறுவனங்களும் கைகோர்த்தன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்