நல்லாட்சிப் பயணத்தின் ஓராண்டு நிறைவு!

நல்லாட்சிப் பயணத்தின் ஓராண்டு நிறைவு!

எழுத்தாளர் Bella Dalima

21 Nov, 2015 | 4:50 pm

இலங்கையின் அரசியல் பயணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி நல்லாட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இற்றைக்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்பாக தீர்க்கமான முடிவொன்றை எடுத்தார்.

பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு மகத்தான வெற்றியை தன்வசப்படுத்தி நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான பயணம் கடந்த வருடம் இதேபோன்ற ஒரு நாளில் பிற்பகல் 3.10 மணிக்கு விசேட ஊடகவியலாளர் சந்திப்புடன் ஆரம்பமானது.

அந்நாட்களில் தான் சமூக அழுத்தம், சர்வதேச தாக்கங்கள், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எழுந்திருந்த சந்தர்ப்பத்தில் இனங்களுக்கு இடையே நல்லுறவையும் சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நற்பெயரைக் கட்டியெழுப்பக்கூடியதுமான பொது வேட்பாளருக்கான தேவை எழுந்தது.

நியாயமான சமூககத்திற்கான தேசிய அமைப்பின் மாதுலுவாவே சோபித்த தேரர் தலைமையிலான பொது அமைப்புக்கள், மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேடிவந்த பொது வேட்பாளர் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தே உருவெடுத்தார்.

இது தொடர்பிலான அறிவித்தல் கடந்த வருடம் நவம்பவர் மாதம் 21 ஆம் திகதி பிற்பகல் 3.10 க்கு கொழும்பு புதிய நகர மண்டப கேட்போர் கூடத்தில் ஆரம்பமான ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

அப்போதைய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக இருந்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன மக்களின் கோரிக்கைக்கு தலைமைத்துவத்தை வழங்க முன்வந்தார்.

படிபடியாக அதிகரித்த மக்கள் ஆதரவோடு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றார்.

வாக்குறுதியளித்தவாறே ஜனாதிபதி பதவியை மக்கள்மயப்படுத்துவதற்கான முதற்படியாக 19 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றி தமது அதிகாரங்களில் சிலவற்றை 100 நாட்களுக்குள் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் பிரயத்தனத்திற்கு மத்தியில் பொதுத் தேர்தலையும் வெற்றிகொண்டு இலங்கைக்கு புதிய அனுபவத்தை சேர்க்கும் வகையிலும் உலகிற்கு புதிய அரசியல் வியூகத்தைக் காண்பிக்கும் வகையிலும் நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நாட்டை நிர்வகிக்கும் தேசிய அரசாங்கமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அர்ப்பணிப்பினால் உருவாகியது.

ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கை எதிர்கொள்ளவிருந்த நெருக்கடி நிலையை மைத்திரி ஆட்சி மாற்றியதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன.

உலகளாவிய ரீதியில் நட்புறவு அதிகரித்து வருகின்ற நிலையில், இலங்கைக்குள் சட்டம், அமைதி, நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் செயற்றிட்டத்தை படிப்படியாக நடைமுறைப்படுத்த முடியும் என்பதை நடைமுறை ரீதியில் நிரூபிக்கும் வகையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றவும் ஜனாதிபதி இணங்கியுள்ளார்

தேர்தல் முறைமையிலும் மாற்றம் ஏற்படவுள்ளது.

இந்த முயற்சிகளுக்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க அமைச்சரவை உபகுழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

பொது வேட்பாளர் காரணமாக உதயமான தேசிய அரசாங்கம் என்ற நோக்கத்தை முன்னோக்கி இட்டுச் சென்று அரசியல் அமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ளும் பொறுப்பு இன்றிலிருந்து கடந்து செல்லவுள்ள நாட்களில் நிறைவேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

12235123_10153651715296327_179130497861423401_n

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்