2016 வரவு செலவுத் திட்டம் ஓர் பார்வை: கல்வித்துறைக்கும் முதலீட்டாளர்களுக்கும் கூடுதல் சலுகைகள் 

2016 வரவு செலவுத் திட்டம் ஓர் பார்வை: கல்வித்துறைக்கும் முதலீட்டாளர்களுக்கும் கூடுதல் சலுகைகள் 

எழுத்தாளர் Bella Dalima

20 Nov, 2015 | 10:21 pm

நாட்டின் 69 ஆவது வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

நீண்டகால பொருளாதார இலக்குகளை வெற்றிகொள்ளும் நோக்கில் இணக்க அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கல்வித்துறை

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறையின் மேம்பாட்டிற்காக 90,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதத்தில் 5.41% ஆகும்.

தற்போதுள்ள இலவசக் கல்வி முறையில் மாற்றமில்லை என கூறப்பட்டுள்ளதுடன், கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தின் பின்னர் மாணவர்களுக்கு கட்டாய தொழிற்பயிற்சி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் 250 ரூபா ஆரம்ப வைப்புடன் சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்கப்படும் எனவும் பாடசாலைகளுக்கு 2016 முடிவிற்குள் மின்சார மற்றும் மலசலக்கூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கென 4000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் நிதியமைச்சர் அறிவித்தார்.

இதேவேளை, அனைத்து அரச பல்கலைக்கழகங்களுக்கும் இலவச WiFi வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டிற்குள் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுதி வசதி செய்துகொடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணனிகளைப் பெற்றுக்கொள்ள மூன்று வருட வட்டியற்ற கடன் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் ஆசிரியர்களுக்கு முதல் 5 வருடங்களுக்குள் 2 வருட கட்டாயப் பயிற்சியளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சியில் விஞ்ஞானப் பீடத்தையும் வவுனியாவில் விவசாயப் பீடத்தையும் அமைக்க வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் மகாபொல பல்கலைக்கழகம் மாலபேயில் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அச்சிடப்பட்ட புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகளுக்கு வரிச்சலுகை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

வர்த்தகம்

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து நிதி அமைச்சர் இன்றைய வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பின் போது தெளிவுபடுத்தினார்.

அதன்படி, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் உதவி வழங்க 500 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

யாழ்ப்பாணம், வன்னி, அம்பாறை, புத்தளம் மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் சிறிய கைத்தொழில் பூங்காக்களை அமைக்கவும் அரசாங்கம் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கியுள்ளது.

வவுனியாவில் 200 மில்லியன் ரூபா செலவில் புதிய பொருளாதார வலயம் ஒன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

உள்ளூர் கைவினைஞர்களை பாதுகாக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் ஆபரணங்களின் மீது 10 வீத செஸ் வரி அறவிடப்படவுள்ளது.

தங்க இறக்குமதிக்காக வரிச்சலுகையுடன் கூடிய 50 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

முதலீட்டு சபை, ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை ஆகியவற்றை மறுசீரமைப்பதற்காக அபிவிருத்திக்கான நிறுவனம் எனும் பெயரில் புதிய நிறுவனம் ஒன்றையும் ஸ்தாபிக்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தளம், அம்பாந்தோட்டை மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கான திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் வர்த்தக வலயங்கள் அமைக்கவும், ஆடைகள், பாதணிகள், இலத்திரனியல் உபகரணங்களுக்கு வரிச்சலுகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நாணய பரிமாற்றத்தை இலகுபடுத்தும் வகையில் கொழும்பில் சர்வதேச நிதி கேந்திர நிலையத்தை அமைக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து ஹோட்டல்களும் அபிவிருத்தி சபையின் கீழ் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், எந்தவொரு வங்கியின் ஊடாகவும் இலங்கையில் நிதி முதலீடு செய்வதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய முதலீட்டு சட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் நிதியமைச்சர் இதன்போது அறிவித்தார்.

வர்த்தக நடவடிக்கையை ஆரம்பிக்கும்போது 10 மில்லியன் ரூபா முதலீடு அல்லது 500 புதிய தொழில்வாய்ப்புகளை வழங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 50% வரிச்சலுகை வழங்கப்படும் எனவும் வரவு செலவு திட்ட சமர்ப்பிப்பின்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்றுமதி அபிவிருத்தியை மேம்படுத்த அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தேயிலை, இரப்பர், தெங்கு உற்பத்தி

2016 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தேயிலை ஏற்றுமதியின் போது Ceylon Tea என பெயரிடப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தேயிலை மற்றும் இரப்பர் துறைகளுக்கான சலுகைகளை வழங்கும் வகையில் பெருந்தோட்டத் துறைகளிலுள்ள கம்பனிகளுக்கு இரண்டு வருட வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தேயிலை உற்பத்தித்துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய விசேட குழு அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தெங்கு உற்பத்தி மேம்பாட்டிற்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயம்

தரமான விதை மற்றும் நாற்றுப்பொருட்கள் உற்பத்திக்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள உரமானிய முறைமையை இரத்து செய்து சிறியளவிலான நெற்செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு மாத்திரம் உரமானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஹெக்டயருக்கும் குறைவான விவசாய நிலங்களை வைத்திருப்போருக்கு 25 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நெல்லிற்கான நிர்ணய விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோகிராம் கீரி சம்பா நெல்லின் விலை 50 ரூபாவாகவும் சம்பா நெல்லின் விலை 41 ரூபாவாகவும் நாட்டரிசி நெல்லின் விலை 38 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியா, தம்புள்ளை, எல்பிட்டிய, கெப்பிட்டிபொல, தம்புத்தேகம ஆகிய பகுதிகளில் மரக்கறி மற்றும் பழங்களை களஞ்சியப்படுத்த குளிர் அறைகளுடன் கூடிய களஞ்சியசாலைகளை அமைக்கவும் வரவு செலவுத் திட்டத்தில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

விவசாய, மீன்பிடி, ஏற்றுமதி வலயங்களை ஸ்தாபிப்பதற்காக முதன்மை கைத்தொழில் அமைச்சுக்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீன்பிடித்துறை

மீனவர்களின் தொழில்சார்ந்த பாதிப்புக்களின் தாக்கத்தைக் குறைப்பதற்காக ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான ஆயுள் காப்புறுதி வழங்கப்படவுள்ளது.

சிலாபம், மிரிஸ்ஸ, கல்முனை, வல்வெட்டித்துறை, காரைநகர் மற்றும் புராணவெல்ல மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு 750 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

கிராமிய அபிவிருத்தி, உட்கட்டமைப்பு மற்றும் நிர்மாணத்துறை

கிராமிய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திற்கும் 1.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

14,022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் 2500 கொத்தணி கிராமங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதேவேளை, 5 ஆண்டுகளில் ஒரு இலட்சம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.

மத்திய வகுப்பினர் மற்றும் தனியார் ஊழியர்களுக்காக கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி உள்ளிட்ட முக்கிய நகரங்களை மையமாகக் கொண்டு விசேட வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மேலும், சிறிய குளங்கள் மற்றும் கால்வாய்களை புனரமைப்பு செய்ய 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வன பாதுகாப்பு, அபிவிருத்தி, சுற்றாடல் மாசுபடலைக் கட்டுப்படுத்தல், உயிர் வளங்களின் பாதுகாப்பிற்கென இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உருக்கு, ஓடுகள், மாபில் மற்றும் மலசலக்கூட உபகரணங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.

நிர்மாணத்துறையில் பயிற்சிபெறும் ஊழியர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இரண்டு வருடங்களில் பிரதேச செயலகங்கள், மாகாண சபைகள், உப தபால் நிலையங்கள், பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசாங்க கட்டடங்களையும் இலத்திரனியல் ரீதியாக இணைக்கும் திட்டமும் அமுல்படுத்தப்படவுள்ளது.

அடுத்த வருடம் முதல் தேசிய இலத்திரனியல் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

2016 ஆம் ஆண்டில் 200 SMART இலத்திரனியல் வகுப்பறைகளும், 2017 ஆம் ஆண்டில் ஆயிரம் SMART இலத்திரனியல் வகுப்பறைகளும் ஸ்தாபிக்கப்படவுள்ளன.

பொருளாதார எண்ணியலாக்கத் திட்டத்திற்கு 10000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரயில் பாதைகளை நவீனமயப்படுத்த 1500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் மத்தளை விமான நிலையம், விமானப் பொருட்கள் கேந்திர நிலையமாக மாற்றப்படும் என அறுவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திகன, பதுளை மற்றும் புத்தளத்தில் உள்நாட்டு விமான நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை உள்நாட்டு வெளிநாட்டு தொழில் முகாமைத்துவ நிபுணர்களைக் கொண்டு மறுசீரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன் மிஹின் லங்கா சரசிறி எனும் பெயரில் சலுகைக் கட்டண விமான சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

கட்டடத்துறையில் பயிற்சி பெறும் ஊழியர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

நிர்மாணத்துறையில் எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்திற்கும் உள்நாட்டு நிறுவனத்துடன் இணைந்து செயற்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித – யானை மோதலுக்கு தீர்வு காணும் நோக்கிலான மூன்றாண்டுத் திட்டத்திற்காக 4000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

வரிவிதிப்பு மற்றும் வங்கி நடவடிக்கைகள்

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் விதிக்கப்பட்ட சொகுசு வரி இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நீக்கப்பட்டுள்ளது.

பங்குச்சந்தை வரி, சொகுசு மற்றும் அரை சொகுசு வாகன வரி, சுற்றுலா அபிவிருத்தி வரி ஆகியன இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நீக்கப்பட்டுள்ளன.

புகையிலை, மதுபானம், சூதாட்டம் மற்றும் பந்தய நிறுவனங்களின் வருமானத்தின் மீது 25 வீத மேலதிக வரி விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத் துறைகள் பெறுமதி சேர் வரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

பெறுமதி சேர் வரி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வருடாந்த எல்லை 12 மில்லியன் ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேச நிர்மாண வரி 4 ரூபாவால் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கசினோ பிரவேச வரி நீக்கப்பட்டுள்ளது.

எஞ்சின் கொள்வனவு அடிப்படையிலான உற்பத்தி வரியை வாகனங்களுக்காக அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாளிகை வரி தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரக் கட்டணம் 150 மில்லியன் ரூபா வரை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதுடன்
மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு புதிதாக மாதாந்த கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காணி விவகாரங்கள் தொடர்பிலான பிரத்தியேக வங்கியொன்றை உருவாக்குவதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரச வங்கிகள் சில ஒன்றிணைக்கப்படவுள்ளதுடன், திவிநெகும அபிவிருத்தி வங்கியை தேசிய சேமிப்பு வங்கியுடன் இணைக்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து ஊழியர்களதும் மாதச் சம்பளம் வங்கிக் கணக்கின் ஊடாக செலுத்தப்பட வேண்டியமை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

55 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் 15 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட சேமிப்பிற்கு 15 வீத வட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு டி.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் சர்வதேச நிதி கேந்திர நிலையம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

வாகன கொள்வனவு/ கட்டணங்கள்

தவணை அடிப்படையில் வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான மதிப்பீட்டுக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளை மதிப்பீடு செய்வதற்கு 2500 ரூபா கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன் ஏனைய வாகனங்களுக்கு 15000 ரூபா செலுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதியின் போது அனைத்து வாகனங்களுக்கும் உரிமச்சான்றிதழ் பெறப்படல் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

புகைப்பரிசோதனைக் கட்டணம் 5000 ரூபா வரை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் உதிரிப்பாகங்களை இணைத்துத் தயாரிக்கப்படும் வாகனங்களை பதிவு செய்வதற்காக 2016 மார்ச் 31 ஆம் திகதி வரை சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது வர்த்தக ரீதியிலான வாகனங்களை 7,50,000 ரூபாவிற்கும் கார்களை ஒரு மில்லியன் ரூபாவிற்கும் பதிவு செய்ய முடியும்.

வாகன அனுமதிப் பத்திரம் பெறுவதற்குத் தகுதியான அரச அதிகாரிகளுக்கு நிதிச் சலுகை வழங்கப்படவுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

பாராளுமன்றத்தில் இன்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2016ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 11 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், 1 லிட்டர் மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 1 கிலோகிராம் பருப்பின் அதிகபட்ச சில்லறை விலை 169 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் கடலையின் அதிகபட்ச சில்லறை விலை 169 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள அதேவேளை,​ குழந்தைகளுக்கான பால்மாவின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

400 கிராம் பால்மாவின் விலை 325 ரூபாவிலிருந்து 295 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், 425 கிராம் ரின் மீனின் விலை 125 ரூபாவால் குறைக்கப்படும் என வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு கிலோகிராம் நெத்தலியின் அதிகபட்ச சில்லறை விலை 410 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கட்டா கருவாடு ஒரு கிலோகிராமிற்கான அதிகபட்ச சில்லறை விலை 1100 ரூபா எனவும் சாலையா கருவாடு 425 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஏனையவை

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சிறுவர் பாதுகாப்பிற்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 2000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜூலை பகிஷ்கரிப்பாளர்களுக்கு ஒரே தடவையில் செலுத்தப்படும் 2,50,000 ரூபாவை ஒதுக்குவதற்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆங்கில தொலைக்காட்சி நாடகம் மற்றும் திரைப்படங்களை வர்த்தக விளம்பர கட்டணங்களில் இருந்து விடுவிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க நாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களை 428 இலிருந்து 600 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நல்லூர், மாத்தறை, கண்டி ஆகிய இடங்களில்  புற்றுநோய் வைத்தியசாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்