2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் இன்று பாராளுமன்றில் சமர்பிப்பு

2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் இன்று பாராளுமன்றில் சமர்பிப்பு

2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் இன்று பாராளுமன்றில் சமர்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

20 Nov, 2015 | 6:24 am

தற்போதைய அரசாங்கத்தின் கன்னி வரவு – செலவுத்திட்டம், சுதந்திர இலங்கையின் 70 ஆவது வரவு – செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட முன்மொழிவு இன்று பிற்பகல் 2 மணியளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் ரவி கருனாநாயக்கவினால் இந்த வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டம் மீதான 2 ஆம் வாசிப்பு நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இரண்டாம் வாசிப்பு தொடர்பான வாத விவாதங்கள் 9 நாட்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

வரவு செலவுத்திட்டம் மீதான 2 ஆம் வாசிப்பு தொடர்பான வாக்கெடுப்பு டிசம்பர் 2 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை வரவு செலவுத்திட்டம் மீதான 3 ஆம் கட்ட வாசிப்பு எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 5 நாட்கள் வாத பிரதிவாதங்கள் நடத்தப்படவுள்ளன.

இதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாசிப்பும் வாக்கெடுப்பும் டிசம்பர் 19 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டம் தொடர்பில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை விசேட கூட்டம் பாராளுமன்ற கட்டட தொகுதியில் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது.

புதிய அரசாங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்டங்களை உள்ளடக்கி இம்முறை வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமது அரசாங்கத்தின் எதிர்கால பொருளாதார கொள்கைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.

10 இலட்சம் தொழில்களை உருவாக்குதல், வருமானத்தை உயர்த்துதல், கிராமிய பொருளாதார அபிவிருத்தி, 30 இட்லசம் பேருக்கு வீட்டுரிமை மற்றும் வலுவான நடுத்தர வர்க்கத்தை உருவாக்குதல் போன்ற 5 பிரதான இலக்குகளை அடிப்படையாகக்கொண்டு பிரதமர் கொள்கை விளக்கமளித்தார்.

அதற்கான பொருளாதார கொள்கைகள் மற்றும் மறுசீரமைப்புகள் இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்படுமெனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நடைமுறையிலுள்ள வரி முறைமையில் சீர்திருத்தம், தனியார் துறைக்கான முதலீடுகளை ஊக்குவித்தல், ஏற்றுமதித் துறையின் மேம்பாட்டிற்கான புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தல் என்பன புதிய அரசின் பொருளாதார இலக்குகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களாகும்.

இதேவேளை, மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் பல்வேறு பொருட்களின் விலைகளை குறைத்தல் உள்ளிட்ட பல நிவாரணங்களை வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் அமைச்சர்களால் ஏற்கனவே பிரஸ்தாபிக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளை செம்மைப்படுத்தும் நடவடிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றன.

இதன்போது வரவு-செலவுத்திட்ட யோசனைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அபிவிருத்தி செயல்நுணுக்க மற்றும் சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் மலிக் சமரவிக்ரம, மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், நிதியமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க ஆகியோரும் இதன்போது பங்கேற்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்