சமுதாய நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்: இலங்கையை வலியுறுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்

சமுதாய நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்: இலங்கையை வலியுறுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்

சமுதாய நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்: இலங்கையை வலியுறுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்

எழுத்தாளர் Bella Dalima

17 Nov, 2015 | 10:27 pm

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் அடையாளத்தை வெளியிடல், அவர்களது வழக்கு விசாரணை மற்றும் விடுதலையை விரைவுபடுத்தல், பயங்கரவாத திருத்தச் சட்டத்தை திருத்தியமைத்தல் உள்ளடங்கலான சமுதாய நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதை நோக்கி அரசாங்கம் செயற்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் சர்வதேச மீளிணைந்த செயற்பாடு தொடர்பில் இலங்கை வெளிப்படுத்திய தேர்ச்சியை ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்கள் வரவேற்பதாகவும், ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனநாயக ஆட்சியை மீள கொண்டுவருவதற்கும், தேசிய நல்லிணக்கத்திற்கான செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கும், சர்வதேச சமூகம் மற்றும் ஐ.நா முறைமையுடன் மீள இணைவதற்கும் இலங்கை எடுத்துள்ள குறிப்பிடத்தக்க முயற்சியை ஐரோப்பிய ஒன்றியத்தின் ​வெளிவிவகாரங்கள் பேரவை வரவேற்றுள்ளது.

நல்லிணக்கம், நல்லாட்சியை வலுப்படுத்தல், ஊழலை எதிர்கொள்ளல், மனித உரிமைகள் மற்றும் சட்ட ஒழுங்கின் மதிப்பை முன்நிறுத்தல் உள்ளிட்ட விடயங்களில் மேலும் தேர்ச்சியை எட்டுவதற்கு இலங்கையுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியம் செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அத்துடன், பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான அபிவிருத்தியை போஷித்தல் உள்ளிட்ட விடயங்களில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு புதிய சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும் பேரவை குறிப்பிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் சிவில் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டியுள்ளது.

அத்துடன், அடையாளம் காணப்பட்ட பாதுகாப்புத் தேவைகளுக்கு அமைய, இராணுவ பிரசன்னத்தை சீரமைத்தல் மற்றும் இராணுவத்தினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள காணிகளை உரியவர்களிடம் மீள ஒப்படைத்தல் உள்ளிட்டவற்றில் சமுதாய நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதை நோக்கி அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மீன் ஏற்றுமதி தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய விதிகளைப் பூர்த்தி செய்வதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளையும் வெளிவிவகார அமைச்சர்கள் பாராட்டியுள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டு விரைவில் மீன் ஏற்றுமதிக்கான தடைகள் நீக்கப்படலாம் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்