எம்.ஏ.சுமந்திரனின் குற்றச்சாட்டுக்கு சி.வி. விக்னேஸ்வரன் அறிக்கை மூலம் பதில்

எம்.ஏ.சுமந்திரனின் குற்றச்சாட்டுக்கு சி.வி. விக்னேஸ்வரன் அறிக்கை மூலம் பதில்

எழுத்தாளர் Bella Dalima

17 Nov, 2015 | 10:00 pm

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தை விமர்சித்த தனது அன்புக்குரிய மாணவரான பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அந்தப் பிரேரணையைத் தயாரித்துத் தருமாறு கோரிக்கை விடுத்தபோது மறுப்பேதும் தெரிவிக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் இதுவரை நாட்டில் நடந்ததைப் பிரதிபலிக்கும் தீர்மானம் எனவும், இனப்படுகொலை சட்டம் இனப்படுகொலையாக நாட்டில் ஏற்றுக்கொண்டுள்ளவற்றை பிரதிபலிக்கும் ஓர் சமூக ஆவணம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை ஜனவரி 8 ஆம் திகதி கொண்டுவந்தமை சுமந்திரன் அவர்களுக்கு பிடிக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலை தொடர்பான வடமாகாண சபையின் தீர்மானம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருடன் நெருங்கிய உறவினை வைத்திருப்பவர்களுக்கு கோபத்தைத் தருவதாக இருந்தாலும் அந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் வடமாகாண சபை உறுப்பினர்களின் ஏகோபித்த கருத்தை வெளிக்காட்டி நிற்பதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியே தம்மை அரசியலுக்கு அழைத்து வந்து வடமாகாண சபையை நிர்வகிக்கின்ற பொறுப்பைக் கொடுத்ததாகக் கூறியுள்ள வடமாகாண சபை முதலமைச்சர், சுமந்திரன் கூறுவதுபோல கட்சிக்கு விசுவாசமாக நடக்க வேண்டும் எனும் நிபந்தனையுடன் தனக்கு பதவி வழங்கப்படவில்லை எனவும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலின்போது கட்சி சார்பாக செயற்படவில்லை என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டையும் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்.

ஏதேனும் ஒரு கட்சியின் நடைமுறை உறுப்பினராக இருந்தாலேயே கட்சி தன்னைக் கட்டுப்படுத்தலாம் எனவும் பெருவாரியாக வாக்களித்த வடமாகாண மக்களே தனது கட்சி எனவும் அவர்களது நன்மையே தனது குறிக்கோள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி பதவியைக் கொடுத்தது என்பதைப் பார்க்கிலும் மக்களே அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்கள் என தெரிவிக்கும் சி.வி.விக்னேஸ்வரன், தான் கேட்டு கட்சி பதவி வழங்குவதையும் கட்சி கேட்டு தான் மக்களிடம் வாக்குப் பெற்று பதவி பெறுவதையும் ஒன்றாகக் கருதமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தலுக்கு பணம் திரட்ட வேண்டுமாயின் அதனை செலவழிக்கப்போகும் பாராளுமன்ற உறுப்பினர்களே அதனை கனேடிய மக்களிடம் கேட்டுப்பெற வேண்டுமே ஒழிய வடமாகாண சபையைச் சேர்ந்த தான் அதனைக் கேட்டுப் பெறுவது எங்ஙனம் எனவும் வடமாகாண முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பணத்தை செலவு செய்பவர்கள், கணக்கு காட்டுபவர்கள் நாட்டிற்கு எடுத்துவருபவர்கள் எனும் சாரர் ஒருபுறம் இருக்க, தன்னை கனடா செல்ல வைப்பதில் கௌரவ சுமந்திரன் ஊக்கம் காட்டியது எதற்காக எனவும் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சிக்கு எதிராக தான் அறிக்கை விட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரித்துள்ள வடமாகாண முதலமைச்சர், கட்சிகளைச் சேராத தான் நடுநிலையாக இருப்பதில் தவறில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து அல்லது நான்கு கட்சிகள் சேர்ந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அபிமானிகள் தம்முள் போட்டியிட்டுக் கொண்ட தேர்தலில் இன்னாருக்கு வாக்களியுங்கள் என்று பாராபட்சம் காட்டுவது எவ்வாறு எனவும் மீண்டும் சி.வி.விக்கினேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு மறுநாள் மலிக் சமரவிக்கிரமவினது வீட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தானும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனும், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் சந்தித்ததாக தனது அறிக்கையில் வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது “வடக்கிலுள்ள இராணுவத்தினர் எவரையும் தான் அகற்றப்போவதில்லை என்பதை மகாநாயக்க தேரருக்கு கூறப்போவதாக பிரதமர் தன்னைப் பார்த்துக் கூறியதாக குறிப்பிட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், தமிழர்களுக்கு ஒரு முகத்தைக் காட்டி மகாநாயக்க தேரர்களுக்கு மறுமுகத்தைக் காட்டுவதே பிரதமரது கூற்றின் உள்நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலதிகத் தகவல்களைக் காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்