அரச திட்டம் சரியாக முன்னெடுக்கப்படாத பட்சத்தில் சாத்வீகப் போராட்டம்: அரசியல் கைதிகள் அறிக்கை

அரச திட்டம் சரியாக முன்னெடுக்கப்படாத பட்சத்தில் சாத்வீகப் போராட்டம்: அரசியல் கைதிகள் அறிக்கை

எழுத்தாளர் Bella Dalima

17 Nov, 2015 | 9:16 pm

அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தேசிய இயக்கம் கொழும்பில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது தமிழ் கைதிகளால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டது.

தமது விடுதலை தொடர்பான செயற்திட்டம் சரியான முறையில் முன்னெடுக்கப்படாத பட்சத்தில் சாத்வீகமான போராட்டமொன்றை முன்னெடுக்க நேரிடும் என தமிழ் கைதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னதாக கைதிகள் விடுதலை தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் சரியாக முன்னெடுக்கப்படாத பட்சத்தில் சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தாம் தள்ளப்படுவோம் என தமிழ் கைதிகள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தமக்கான புனர்வாழ்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது தாம் சிறையில் நீண்டகாலம் செலவிட்டதைக் கருத்திற்கொண்டு ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கு உட்பட்டதாக அதனை செயற்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தமிழ் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் பிரகாரம் முதற்கட்டமாக 10 நாட்களுக்குள் முதற்தொகுதி கைதிகள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவார்கள் என்பதுடன், ஏனைய கைதிகள் கட்டம் கட்டமாக முற்றாக விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் தங்களுக்கு அறிவித்துள்ளதாக தமிழ் கைதிகள் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, தங்களின் போராட்டத்தைக் கைவிடுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் வட மாகாண சபை உறுப்பினர்களும் வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் புலம்பெயர் அமைப்புகளும் மக்களுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் மூலம் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கைதிகள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்