தொடர் மழையால் குளக்கட்டுகள் உடைப்பெடுத்து வீதிகள் நீரில் மூழ்கின

தொடர் மழையால் குளக்கட்டுகள் உடைப்பெடுத்து வீதிகள் நீரில் மூழ்கின

எழுத்தாளர் Bella Dalima

03 Nov, 2015 | 5:37 pm

தொடர்ந்தும் பெய்துவரும் பலத்த மழையால் சில பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

எப்பாவெல வாவியின் குளக்கட்டு நேற்றிரவு உடைப்பெடுத்துள்ளதுடன் சுமார் 20 அடி சேதமடைந்துள்ள குளக்கட்டின் ஊடாக வெளியேறும் நீர் 40 ஹெக்டயர் வயல் நிலத்தில் தேங்கியுள்ளது.

இதனால் அதனை அண்மித்த பகுதிகளின் சில வீதிகளும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.

அநுராதபுரம் நாச்சாதூவ வாவியின் ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. வாவியிலிருந்து வெளியேறும் நீர் மல்வத்து ஒயாவைச் சேர்கின்றது. இதனால் அனுராதபுரம் புனித நகரிலுள்ள குறுக்கு வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 18 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் நொடிக்கு 32,600 சதுர அடி நீர் வெளியேறுகின்றது. இதனால் கலா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. குறித்த ஆற்றை அண்மித்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தெதுரு ஒயா நீர்த்தேக்கத்தின் 7 வான்கதவுகள் இன்று காலை திறக்கப்பட்டன.

டிக்கோயா பாத்போர் பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் தொடர்ந்தும் பாத்போட் தேவாலயத்தில் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர்.

தொடர்ந்தும் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதனால் 27 பேரும் தேவாலயத்தில் தங்க வைக்கப்பட்டடுள்ளனர்.

மலையத்தில் தொடரும் சீரற்ற வானிலையால், ஹட்டன் நோட்டன் விமல சுரேந்திர நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

களனி ஆறு, காசல்றீ மற்றும் மௌசாகலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 100.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கொக்கட்டிச்சோலை மற்றும் வவுணதீவு பகுதிகளிலுள்ள சில வீதிகள் மற்றும் பாலங்களை ஊடறுத்து வௌ்ளம் பாய்கின்றது. இதனால் குறித்த வீதிகளூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

உன்னிச்சை குளத்தில் 25.04 அங்குலம் நீர் பெருகியுள்ளதனால் மூன்று பிரதான வான் கதவுகள் சுமார் ஓர் அடி வீதம் திறந்துவிடப்பட்டுள்ளன.

உருகாமம் குளத்தில் 14.7 அங்குலம் நீர் பெருகியுள்ளதனால் அதன் இரண்டு வான்கதவுகளும் இரண்டு அடிவரை திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

புத்தளம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் தாழ்நிலப்பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.

தொடரும் மழை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கம், தெதுறு ஓயா ஆகியவற்றின் சில வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.

இதனால், எழுவான்குளம் எல்லையில் அமைந்துள்ள கலா ஓயா பாலத்தின் மேலாக வௌ்ளம் பாய்வதுடன், இந்த வீதியின் ஊடான மன்னாருக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

எனவே, மாற்று வீதியான அனுராதபுரம் வீதியைப் பயன்படுத்துமாறு புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்