இலங்கை, தாய்லாந்து வர்த்தக மாநாட்டில் ஜனாதிபதி உரை

இலங்கை, தாய்லாந்து வர்த்தக மாநாட்டில் ஜனாதிபதி உரை

எழுத்தாளர் Bella Dalima

03 Nov, 2015 | 9:02 pm

வெளிநாட்டு முதலீடுகளுக்கான வசதிகளை ஏற்படுத்தும்போது, நாட்டின் தற்போதைய முதலீட்டுக்கு உகந்த பொருளாதார வழிமுறை குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின், பேங்கொக் நகரில் இன்று முற்பகல் இடம்பெற்ற இலங்கை – தாய்லாந்து வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறினார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிலவும் முதலீட்டு வழிமுறைகள் குறித்து நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும் என்றும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சுற்றுலா, விவசாயம் மற்றும் இரத்தினக்கல் அகழ்வு போன்ற துறைகளில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதன் ஊடாக தாய்லாந்து முதலீட்டாளர்கள் அதிக நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த மாநாட்டில் தாய்லாந்து நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய அந்த நாட்டின் துணைப் பிரதமர், இரப்பர், சுற்றுலா மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக இந்த மாநாட்டில் தெரிவித்தார்.

இதன்பொருட்டு ஸ்திரமான பொருளாதார அபிவிருத்திக்கான சவால்களை வெற்றிகொள்வதன் ஊடாக முன்நோக்கிச்செல்வதே மிகவும் முக்கியமான விடயம் என்றும் தாய்லாந்தின் துணைப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வர்த்தக மாநாட்டில் இலங்கை முதலீட்டு சபையின் உறுப்பினர்கள் உட்பட அந்த நாட்டில் முதலீடு செய்யும் இலங்கையர்கள் பலரும் கலந்துகொண்டிருந்ததாக ஜனாதிபதி சிரேஷ்ட ஊடகப் பணிப்பாளர் தர்மசிறி பண்டார கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்