நடராஜா ரவிராஜ் கொலை; சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

நடராஜா ரவிராஜ் கொலை; சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

நடராஜா ரவிராஜ் கொலை; சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

21 Oct, 2015 | 9:55 am

பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் 6 சந்தேகநபர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுமாறு சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது

கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பெர்னாண்டோ முன்னிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், தற்போது கடற்படை தரப்பைச் சேர்ந்த சிலர் விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இந்த விவகாரம் தொடர்பில் மரபணு மற்றும் வழக்கு தடயப் பொருட்கள் குறித்து அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரால் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீதவான் இதன்போது அறிவித்துள்ளார்.

அத்துடன் இரசாயன பகுப்பாய்வு அறிக்கை கிடைத்தவுடன் வழக்கு தாக்கல் செய்யுமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி நாராஹேன்பிட்டியில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு அடுத்த மாதம் மூன்றாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்