கனேடியப் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற கெரி ஆனந்தசங்கரி – ஓர் பார்வை

கனேடியப் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற கெரி ஆனந்தசங்கரி – ஓர் பார்வை

எழுத்தாளர் Bella Dalima

21 Oct, 2015 | 5:56 pm

கனேடியப் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று அடுத்த பிரதமராகத் தெரிவாகியுள்ள ஜஸ்டின் ட்ருடோவின் லிபரல் கட்சியில் தமிழரான கெரி ஆனந்தசங்கரி போட்டியிட்டு அமோக வெற்றியீட்டியுள்ளார்.

கெரி ஆனந்தசங்கரி கனடாவின் ஸ்காபரோ ரோக் பார்க் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு 60 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.

1983 ஆம் ஆண்டு தனது 10 ஆவது வயதில் கனடா சென்ற கெரி ஆனந்தசங்கரி, மனித உரிமை ஆர்வலராக விளங்குகின்றார்.

ஹரினி சிவலிங்கத்தைக் கைத்தலம்பற்றிய கெரி ஆனந்தசங்கரி, இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக கெரி ஆனந்தசங்கரி இளைஞர்கள், அகதிகள் மற்றும் புலம்பெயர் சமூகங்களின் பாராட்டுதல்களைப் பெற்ற வலுவான வழக்கறிஞராகவும் திகழ்கின்றார்.

பல அமைப்புக்களில் உயர் பதவிகளை வகித்துள்ள இவர், தமிழ் இளையோர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவராகவும் செயற்படுகின்றார்.

மேலும், கனேடிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் தலைவராகவும், கனடா தமிழ் காங்கிரஸின் ஆலோசகராகவும் பதவிகளை வகித்துள்ளார்.

சட்டத்தரணியான கெரி ஆனந்தசங்கரி, உலக தமிழ் தலைவர்களின் மதிப்பைப் பெற்றவராக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சட்டத்தரணி கெரி ஆனந்தசங்கரி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீ. ஆனந்தசங்கரியின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்