அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும்: வீ.ஆனந்த சங்கரி வலியுறுத்தல்

அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும்: வீ.ஆனந்த சங்கரி வலியுறுத்தல்

அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும்: வீ.ஆனந்த சங்கரி வலியுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

09 Oct, 2015 | 6:04 pm

பல வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி வலியுறுத்தியுள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் பொது மன்னிப்பு வழங்கப்படுவது புதிய விடயமொன்றல்ல எனவும் ஏற்கனவே இலங்கை – இந்திய ஒப்பந்த காலப்பகுதியில் பலர் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜிவ் காந்தி மீது தாக்குதல் நடத்தியவருக்கும் பொதுமன்னிப்பளிக்கப்பட்டதாகவும் ஆனந்த சங்கரி கூறியுள்ளார்

அத்துடன், பல அரசியல் கைதிகள் விசாரணைகள் எதுவுமின்றி சிறையில் வாடுவதாகவும் அவர்களின் குற்றத்திற்கான தண்டனையை விட அதிக வருடங்கள் விசாரணைக்கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனந்த சங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நாட்டில் நிலவும் நல்லாட்சியை உறுதிப்படுத்தும் வகையில் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் வீ.ஆனந்த சங்கரியின் அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த கால அரசாங்கங்கள் நல்லாட்சிக் கொள்கையினை முன்னெடுத்திருந்தால் எமது மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவையேற்பட்டிருக்காது எனவும் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியிருக்க மாட்டார்கள் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏதேனுமொரு காரணத்திற்காக தவறாக வழிநடத்தப்பட்டு குற்றவாளிகள் என முத்திரை குத்தப்பட்டவர்களே இன்று சிறையில் வாடுவதாகவும் அவர்களை வழி நடத்தியவர்கள் வெளியில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் வீ.ஆனந்த சங்கரி கூறியுள்ளார்

பாரதூரமான குற்றங்களைப் புரிந்தவர்கள் பலர் பொதுமன்னிப்பினூடாக விடுவிக்கப்படுகையில், அரசியல் கைதிகளை ஏன் விடுதலை செய்யக் கூடாது எனவும் ஆனந்த சங்கரி தமது அறிக்கையில் கேள்வியெழுப்பியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்