வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டனர்

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டனர்

எழுத்தாளர் Bella Dalima

07 Oct, 2015 | 9:18 pm

சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழியை அடுத்து வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் முன்னெடுத்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

எனினும், ஒரு வாரத்தில் தீர்வு கிடைக்காவிடில் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

கடந்த நான்கு மாத சம்பளமும், 30 வீத நிலுவையும் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடதாசி ஆலை ஊழியர்கள் கடந்த 19 நாட்களாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, ஊழியர்கள் கடதாசி ஆலையின் கூரை மீது ஏறியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது உழைப்பிற்கான ஊதியத்தை தாமதம் இன்றி வழங்குமாறு இவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்துகொள்வதற்காக இன்று கொழும்பில் இருந்து அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று அங்கு சென்றிருந்தது.

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் மேலதிக செயலாளரும் அங்கு சென்றிருந்தார்.

இதன்போது ஊழியர்களுடன் கலந்துரையாடிய அமைச்சின் மேலதிக செயலாளர் ஒரு வாரத்தில் பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவதாகக் கூறியுள்ளார்.

எனினும் ஒரு வாரத்தில் தீர்வு கிடைக்காவிட்டால் தாம் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் இன்று தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்