கிளிநொச்சியில் 2 பிள்ளைகளின் தாய் பாலியல் வன்புணர்வு: 3 இராணுவ வீரர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை

கிளிநொச்சியில் 2 பிள்ளைகளின் தாய் பாலியல் வன்புணர்வு: 3 இராணுவ வீரர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை

எழுத்தாளர் Staff Writer

07 Oct, 2015 | 1:09 pm

கிளிநொச்சி, விசுவமடுவில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் பிரதிவாதிகள் மூவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று கடூழிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2010 ஆம் ஆண்டின் ஜூலை மாதமளவில் விசுவமடு பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயான 28 வயதுப் பெண்ணை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நான்கு இராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் பிரதிவாதிகளான 3 இராணுவ வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமானதை அடுத்து, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் குற்றவாளிகளுக்கான தண்டனைகளை அறிவித்தார்.

இதற்கமைய, இரண்டு குற்றவாளிகளுக்கு தலா 20 வருட கடூழிய சிறைத்தண்டனையுடன் 25 ஆயிரம் ரூபா வீதம் அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராதத் தொகையை செலுத்துவதற்கு தவறும்பட்சத்தில் தலா இரண்டு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறும் தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன், அபராதத் தொகையை செலுத்துவதற்குத் தவறும் பட்சத்தில் தலா இரண்டு வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் அறிவித்துள்ளார்.

மூன்றாவது குற்றவாளிக்கு ஐந்தாண்டு கடூழிய சிறைத்தண்டனையுடம் பத்தாயிரம் ரூபா அபராதமும் ஒரு இலட்சம் ரூபா நட்டஈடும் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அபராதத் தொகையை செலுத்துவதற்குத் தவறினால், மேலும் ஒரு வருட சிறைத்தண்டனையும், நட்ட ஈட்டை செலுத்துவதற்கு தவறும்பட்சத்தில் ஒரு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் எனவும் யாழ். மேல் நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கின் மற்றுமொரு பிரதிவாதியான இராணுவ வீரர் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி மா. இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்