வருமான வரி செலுத்தவில்லை என்பது உண்மைக்குப் புறம்பானது: விஜய் அறிக்கை

வருமான வரி செலுத்தவில்லை என்பது உண்மைக்குப் புறம்பானது: விஜய் அறிக்கை

வருமான வரி செலுத்தவில்லை என்பது உண்மைக்குப் புறம்பானது: விஜய் அறிக்கை

எழுத்தாளர் Bella Dalima

06 Oct, 2015 | 3:08 pm

நடிகர் விஜய் கடந்த 5 வருடங்களாக வருமான வரி செலுத்தவில்லை என அண்மையில் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

இது தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் பரவலாகப் பேசப்பட்டது.

இந்நிலையில், தமது வீட்டில் சமீபத்தில் வருமான வரி சோதனை நடந்தது எனவும் தான் எவ்வித வரி ஏய்ப்பிலும் ஈடுபடவில்லை எனவும் விஜய் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது;

”வருமான வரித்துறையினர் கலை உலகைச்சார்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் சோதனையிடுவதும், தணிக்கை செய்வதும் இயல்பான ஒன்று. கடந்த வாரம் என்னுடைய இல்லத்திலும் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் நான் வருமான வரி ஏய்ப்பு ஏதும் செய்துள்ளேனா என்று சோதனையிட்டார்கள்.

நானும், எனது குடும்பத்தாரும், எனது அலுவலர்களும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். ஆனால் சில பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் நான் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்று உண்மைக்குப் புறம்பான செய்தியை கூறியுள்ளதை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

மேற்படி செய்தியில் சிறிதளவும் உண்மையில்லை. நான் சட்டத்தை மதித்து நடப்பவன். என்றும் சட்டத்துக்கு மரியாதை கொடுப்பவன். நடப்பு நிதியாண்டு வரை நான் என்னுடைய தொழில் மற்றும் வருமானம் சம்பந்தப்பட்ட கணக்கினை குறித்த நேரத்தில் உரிய வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்து, அதற்குரிய வருமான வரியையும், சொத்து வரியையும், தொழில் வரியையும் முறையாக செலுத்தியுள்ளேன் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.

மேலும் நான் எப்பொழுதும் வருமான வரித்துறைக்கு முழு ஒத்துழைப்பும் தருவேன். எனவே உண்மைக்கு புறம்பான தேவையற்ற வீண் கருத்துக்களை செய்தித்தாள்களிலோ, ஊடகங்களிலோ வெளியிட்டு என் மனதைப் புண்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.”

என விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்