நாவுறு தீவு திறந்த முகாமாகும்: 600 பேரினது விண்ணப்பங்களை பரிசீலிக்கவும் நடவடிக்கை

நாவுறு தீவு திறந்த முகாமாகும்: 600 பேரினது விண்ணப்பங்களை பரிசீலிக்கவும் நடவடிக்கை

நாவுறு தீவு திறந்த முகாமாகும்: 600 பேரினது விண்ணப்பங்களை பரிசீலிக்கவும் நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

06 Oct, 2015 | 7:32 pm

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி, நாவுறு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 600 பேரினது விண்ணப்பங்களை இந்த வாரத்திற்குள் பரிசீலிக்கவுள்ளதாக நாவுறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாவுறு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் எதிர்வரும் காலங்களில் அத்தீவில் சுதந்திரமாக நடமாடக்கூடிய வகையில் திறந்த முகாமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக​ BBC செய்தி வெளியிட்டுள்ளது.

நாவுறு தீவிலுள்ள முகாம்களில் பல நாடுகளையும் சேர்ந்தவர்கள் பல வருடங்களாகத் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படகு மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்தவர்களே இவ்வாறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவிடம் தஞ்சம் கோரி வருவோரை நாட்டுக்கு வெளியே தடுத்து வைக்கும் கொள்கைக்கு எதிராக அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட சில நாட்களே உள்ள நிலையில், இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக BBC செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாவுறு தீவில் சுமார் 1000 பேர் அகதிகளாகத் தங்கியிருப்பதாகவும், அவர்களில் 400 பேருக்கு அகதி அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஞ்சிய சுமார் 600 பேர் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய சூழ்நிலையில் அங்கு தங்கியிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் சுமார் 150 பேர் இலங்கையர்களாக இருக்கலாம் எனவும் BBC செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்