முல்லைத்தீவு வறுமையில் வாடும் மாவட்டம்: ஐ.நா அறிக்கையில் தகவல்

முல்லைத்தீவு வறுமையில் வாடும் மாவட்டம்: ஐ.நா அறிக்கையில் தகவல்

எழுத்தாளர் Bella Dalima

30 Sep, 2015 | 8:23 pm

முல்லைத்தீவு மாவட்டம், மிகுந்த வறுமையில் வாடுகின்ற மாவட்டமென ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையொன்றில் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அதிக வறுமை நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக BBC உலக சேவை தெரிவித்துள்ளது.

கொழும்பில் 1.4 வீதமானவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளதாகவும், முல்லைத்தீவில் சுமார் 30 வீதமானவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவைப் போன்று யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமான கிளிநொச்சியில் சுமார் 13 வீதமானவர்கள் வறுமையில் வாடுவதாக அந்த அறிக்கை கூறுகின்றது.

முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான் பகுதியில் யுத்த காலத்திலும் அதற்கு முன்னரும் இயங்கி வந்த ஓட்டுத்தொழிற்சாலை இன்னும் செயலிழந்திருப்பதாகவும் BBC செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓட்டுத் தொழிற்சாலை புனரமைக்கப்பட்டு ஓடுகள் உற்பத்தி செய்யப்படுமானால் பலர் அங்கு வேலை வாய்ப்பைப் பெறுவதற்கு வழியேற்படும் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மீள்குடியேற்றத்தின் பின்னர் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளின் கூரைக்கான ஓடுகளை அந்த மாவட்டத்திலேயே மக்கள் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்படும் எனவும் BBC சுட்டிக்காட்டியுள்ளது.

முல்லைத்தீவு மீனவர்கள் தமது கடலில் சுதந்திரமாகத் தொழிலை முன்னெடுக்க முடியாமை, ஏனைய தொழில்துறைகள் அங்கு வளர்ச்சியடையாமை ஆகிய காரணங்களால் அந்த மாவட்டம் பொருளாதார ரீதியில் பின்னடைய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளதாக BBC செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்