சீரற்ற வானிலை தொடர்கிறது: 17,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு

சீரற்ற வானிலை தொடர்கிறது: 17,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Sep, 2015 | 9:49 pm

நிலவும் சீரற்ற வானிலையால் 6 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, நுவரெலியா, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

இதேவேளை, சீரற்ற வானிலையினால் 17,000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் சுட்டிக்காட்டியது.

இந்நிலையில், கடும் மழை காரணமாக காலி மாவட்டத்தின் பத்தேகம – காலி, ஹோலுவாகொட- தேவாலேகம, ஹபராதுவ – ஹப்பாவன ஆகிய வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

போபேபோத்தல பிரதேச செயலகப் பிரிவில் ஓபாத பிரதேசத்திற்குள் நுழையும் அனைத்து வீதிகளும் நீரில் மூழ்கியுள்மையினால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

காலி, வதுரப, ஒஹலலேவல ஆகிய பகுதிகளில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளமையினால் இடம்பெயர்ந்துள்ள பல குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வதுரப பிரதேச செயலக உறுப்பினர்கள் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பான இடங்களுக்கு அதை்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கின் கங்கை பெருக்கெடுத்தமையினால் நாகொட, உடுகம, குருபனாவ, மாபலகம ஆகிய பகுதிகளின் தாழ் நிலப்பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

பத்தேகம – உடுகம வீதி நீரில் மூழ்கியமையினால் அந்த வீதியூடான போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டது.

இதேவேளை, நில்வலா ஆறு பெருக்கெடுத்துள்ளமையினால் அக்குரஸ்ஸை- சியஒலகொட, அக்குரஸ்ஸை – கம்புறுபிட்டிய, அக்குரஸ்ஸை – கந்துவ ஆகிய வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதேவேளை, மாத்தளை அக்குரஸ்ஸை தெலிஜ்ஜவில மத்திய மகா வித்தியாலயத்தின் 4 கட்டடங்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.

மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள தெலிஜ்ஜவில மத்திய மகா வித்தியாலத்தில், சுமார் 2100 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

மண்சரிவு அபாய எச்சரிக்கையினை அடுத்து சில மாதங்களுக்கு முன்னர் விடுதி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, மலையகம் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிகளும் கடும் மழை பெய்து வருகிறது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்